கோவை விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் அளவு அதிகரிப்பு

கொரோனாவால் துவண்டு போயிருந்த கோவை விமான நிலையத்தில் மீண்டும் சரக்குகள் கையாளும் எடை அளவு 900 டன்னை கடந்துள்ளது.

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

சர்வதேச விமான வசதி இல்லாத நாடுகளுக்கும் கூட பாண்டட் டிரக் சேவை மூலம் சரக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்கறிகள், பழங்கள், பூ, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், வார்ப்படம், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து விமான சேவை மற்றும் சரக்கு போக்குவரத்து மீண்டு வர தொடங்கி உள்ளது. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர் மாதாந்திர சரக்கு கையாளும் அளவு 900 டன் எடையை கடந்துள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: கோவை விமான நிலையத்தில் உள்ள ஒருங்கிணைந்த சரக்கக வளாகத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் மாதந்தோறும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 800 டன் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 200 அல்லது 250 டன் எடையிலான சரக்குகள் கையாளப்படுவது வழக்கம்.

கொரோனா பரவலால் சரக்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது விமான பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மாதந்தோறும் 600 முதல் 800 டன் எடையிலான சரக்குகள் கையாளப்பட்டன.

செப்டம்பரில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 790 டன், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 141 டன் என மொத்தம் 931 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. தற்போது 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரே மாதத்தில் கையாளப்பட்ட மொத்த சரக்குகளின் எடையளவு 900 டன் எடை அளவை கடந்துள்ளது என தெரிவித்தனர்.