ஆர்.வி கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினவிழா

காரமடை, டாக்டர். ஆர்.வி‌.கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தினவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கணிதவியல் துறைத்தலைவர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உமாபிரியா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமை வகித்தார்.

கோவை, கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விலங்கியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறையின் உதவிப் பேராசிரியர் ராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘அக்வாபோனிக்ஸ் நிபுணர்களின் தொழில் முனைவோர் திறன் மேம்பாடு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசிய உரையில், மனித வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரம் விவசாயம். விவசாயத்தின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். தற்போது நவீனமாக அக்வாபோனிக்ஸ் முறையில் மீன் வளர்ப்பு மற்றும் நீரியல் தாவர வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நீர் வாழ் விலங்குகள் வளர்க்கப்படுவதோடு அதன் கழிவுகள் உரமாக்கி பயிர்களும் வளர்க்கப்படுகின்றன. இது குறைந்த நீரை பயன்படுத்தி உயர்ந்த விளைச்சலை பெறுகின்ற முறையாகும்‌.

இதன் மூலம் பயிர்களுக்கு உரமிடுதல் மற்றும் களையெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. இம்முறையை பயன்படுத்தி நாம் வீட்டிலும் சமையல் அறைத்தோட்டம், மொட்டை மாடித் தோட்டம் அமைத்து இயற்கையான காய்கறிகளை பயிர் செய்ய முடியும். குழாய்கள் மூலமாக காய்கறிச்செடி வளர்ப்பும் இதனால் சாத்தியமாகும் என்று பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.