சிக்கலான இருதய வால்வு பிரச்சினைக்கு தீர்வளித்த ஜி.கே.என்.எம் மருத்துவமனை

கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் 73 வயதுடைய பெண் ஒருவருக்கு இதயத்தின் மிக முக்கியமான வால்வில் கால்சியம் அதிகம் படிந்திருந்ததால் அறுவை சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்று நவீன சிகிச்சையின் (Transcatheter Aortic Valve Replacement) மூலம் வால்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிக்கலான சிகிச்சை குறித்து ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் இருதயவியல் துறையின் தலைமை மருத்துவர் ராஜ்பால் அபாய்சந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்:

இருதயத்தின் அயோர்டா வால்வு சுருங்கும் போது இருதயத்தில் இருந்து செல்லும் ரத்தம் குழாய் வழியாக உடலின் பிற பாகங்களுக்கு செல்லும் ரத்தம் தடைப்படும். பொதுவாக இதுபோன்ற பிரச்சனை நூறில் ஒருவருக்கு ஏற்படும். வயதாகும் போது இந்த வால்வின் சுருக்கம் அதிமாகும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம், தலைசுற்றல், மயக்கம் வருதல் போன்ற பாதிப்புகள் இருக்கும். முன்பெல்லாம் இருதய வால்வில் ஏதேனும் சுருக்கம் அல்லது அடைப்பு இருந்தால் பொதுவாக திறந்த இருதய அறுவை சிகிச்சை தான் செய்யப்படும். தற்போது இதற்கு அறுவை சிகிச்சை அளிப்பது குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக கால் தொடையில் துளையிட்டு அதன்மூலமாக இருதய வால்வு மாற்றம் செய்யப்படுகிறது.

நங்கள் சிகிச்சை அளித்த பெண்ணிற்கு (வயது 73) இந்த வால்வு சுருங்கி இருந்ததுடன், அவருக்கு மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது. பரிசோதனையில் இருதயத்தின் முக்கிய வால்வு மிகவும் குறுகலாக இருப்பது (Aortic Stenosis) தெரிய வந்தது.

இதற்காக மார்பில் திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்யும்போது அயோர்டாவில் அதிகப்படியான கால்சியம் படிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், முறியத்தக்க நிலையில் வால்வு இருந்தது. இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சிக்கலானது.

எனவே அவருக்கு கால் தொடையில் மூன்று மில்லி மீட்டர் அளவில் துளையிட்டு இருதய வால்வு மாற்று சிகிச்சை அளிக்க எங்கள் மருத்துவக் குழு முடிவு செய்தது. இந்த துளை வழியாக இருதய வால்வினை விரியச்செய்து சிறிது இடத்தினை உருவாக்கி, முன்பிருந்த வால்வு ஒருபுறம் ஒதுக்கப்பட்டது. பின்பு புதிய செயற்கை வால்வு திறந்த நிலையில் பொருத்தப்பட்டது. இந்த புதிய வால்வு உடனே இயங்கத் தொடங்கியது. இந்த சிகிச்சை ஒன்றரை மணி நேரத்தில் செய்யப்பட்டதாக மருத்துவர் ராஜ்பால் அபாய்சந்த் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில்: இதயத்தில் ஏற்படும் இந்த கால்சியம் படிவுகள் வயது காரணமாக ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், ரத்த அழுத்தம், புகை பிடித்தல், உடலில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பது போன்ற காரணங்களினாலும் கால்சியம் படிவது அதிகரிக்கும். இது போன்ற பாதிப்பு நூறில் 1 சதவீதம் பேருக்கு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு இதுபோன்ற இருதய வால்வு மாற்று நவீன சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் மேற்கூறிய பெண்மணிக்கு கால்சியம் படிவு அதிகம் இருந்ததினால் அவருக்கு மிகவும் சவாலான சூழ்நிலையிலேயே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.