ஹேக்கத்தான் போட்டியில் கே.பி.ஆர் கலைக் கல்லூரி மாணவர்கள் சாதனை

கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு துறையைச் சேர்ந்த மாணவர்கள், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 போட்டியில் சாதனை படைத்துள்ளனர். இதனை பாராட்டும் விதமாக கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் அஞ்ஜித் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

விழாவிற்கு, கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமை வகித்து, அணி சிறப்பாக செயல் பட்டாமைக்காக வாழ்த்து தெரிவித்தார். சிறந்த சாதனை படைத்த ‘வெற்றியாளர்களை’ கல்லூரியின் ஆலோசகர் மற்றும் செயலர் ராமச்சந்திரன் பாராட்டினார்.

வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கே.பி.ஆர். நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி பாராட்டி அணியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 போட்டியின் மென்பொருள் பதிப்பு, மங்களூருவில் உள்ள சஹ்யாத்ரி பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் நிறைவடைந்தது. அங்கு இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஒன்பது பிரச்சனை அறிக்கைகளுக்கான தீர்வுகளை வழங்குவதில் பதினோரு மாநிலங்களில் இருந்து 183 பேர் கொண்ட 24 குழுக்கள் பங்கேற்றன.

தமிழ்நாட்டின் கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கே.பி.ஆர் காஸ் ஆல்பா குழு, பயண நேரத்தைக் குறைக்க சாலை நெட்வொர்க்கில் சேர்க்கக்கூடிய விடுபட்ட எல்.எஸ்.பி.,களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு அதற்கான தீர்வினையும் முன்மொழிந்தனர். ராம் பிரகாஷ் தலைமையிலான குழுவில், பிரதீப், கதிரவன், நர்மதா, அக்ஷயா, சுபிஹா மற்றும் குழு வழிகாட்டி அஞ்ஜித் ராஜா ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.