சாலை கூறும் சரித்திரம் – அய்யண்ண கவுடர் வீதி

இன்று கோயம்புத்தூர் நகரத்தில் சமூகத்தில் தொழில், வணிகத்தில் சிறந்த பல பிரமுகர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சென்னை சில்க்ஸ், கணபதி சில்க்ஸ் போன்ற ஜவுளிக்கடைகள், வசந்த் அண்ட் கோ, விவேக்ஸ் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் கடைகள், கார் ஷோரூம்கள், என்று பல்துறை சார்ந்த, பல விதமான வியாபாரங்கள் வந்துவிட்டன. ஆனால் அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் சார்ந்துதான் பெரும்பாலான தொழில் மற்றும் வியாபாரங்கள் இருந்தன. பருத்தி, அரிசி, எண்ணெய் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜின்னிங் ஆலைகள், பஞ்சாலைகள், தானிய வியபாரம், அரிசி ஆலை  போன்றவை பல பகுதிகளில் நன்கு நடந்துவந்தன. அப்படி ஒரு வியாபாரம்தான் பாக்கு வியபாரம். ஆம். வெற்றிலையுடன் பாக்கு என்று சொல்கிறோமே அந்த பாக்குதான்.

அந்த பாக்கு வியாபாரத்தில் 1940களிலேயே கோவை நகரத்தில் கொடிகட்டிப்பறந்த ஒருவர் இருந்தார். அவர் பெயர் அய்யண்ண கவுடர். டவுன்ஹால் பகுதியில் உள்ள வெரைட்டி ஹால் சாலைக்கு தெற்குப்புறமாக, டவுன்ஹாலுக்கு வடக்குப்புறமாக உள்ள இடைப்பட்ட பகுதியில் கன்னட மொழி பேசும் ஒக்கலிக கவுடர்கள் நிறைய பேர் காலம், காலமாக வசித்து வருகின்றனர். அவர்கள் எல்லாம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் பகுதியில் இருந்து இப்பகுதியில் குடியேறியவர்கள் ஆவர். அப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தவர்தான் அய்யண்ண கவுடர்.

அவர் பாக்கு வியாபாரத்தில் ஈடுபட்டு, தனது முயற்சியாலும், உழைப்பாலும் பெரிய செல்வந்தர் ஆனவர். அவர் பெயரில் அமைந்த ஒரு கல்யாண மண்டபம் இப்பகுதியில் உள்ளது. அப்படி ஒரு மண்டபம் இருப்பதே தெரியாத அளவுக்கு சிறு, சிறு தெருக்களும், சந்துகளும் அமைந்த பகுதியாக இப்பகுதி இருக்கிறது. 1950ம் ஆண்டு திறப்புவிழா கண்ட இந்த கல்யாண மண்டபம் அமைந்துள்ள வீதியின் பெயர்தான் அய்யண்ண கவுடர் வீதியாகும். இந்த அய்யண்ண கவுடர் கல்யாண மண்டபத்தை திறந்து வைத்தவர் யார் என்று தெரியுமா? அன்றைய மைசூர் மாகாணத்தின் பொக்கிஷ மந்திரி எனும் நிதி மந்திரி திரு.தாசப்பா அவர்கள் ஆவார்.

அக்காலத்தில் இப்பகுதியில் அந்த அளவு முக்கிய பிரமுகராகவும், ஒரு செல்வந்தராகவும் இருந்த அய்யண்ண கவுடரின் பெயர்தான் இந்த வீதிக்கு வைக்கப்பட்டுள்ளது.

– சி.ஆர்.இளங்கோவன், வரலாற்று ஆய்வாளர்.