கொங்குச்சீமை செங்காற்று 17 – நானும், தம்பியும் இதுக்கு ஒத்துக்கலீன்னா?

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை…

– சூர்யகாந்தன்

 

நானில்லாத சமயமாப் பாத்து இப்படியொரு யோசனை பண்ணிருக்காங்களா…?

வீட்டு முகட்டை அனுதாபத்தோடு பார்த்தவாறு கேட்டான். சுப்பையன்!

“..இன்னிக்கு இல்லீனாலும் எப்பாச்சும் ஒரு நாள் இந்தப் பேச்சு வந்தேதானுங்க தீரும்! இதுலெ நாம அக்யானப் படுறதுக்கு என்ன இருக்குதுங்க மாமா…” தேறுதல் சொல்ல முற்பட்டாள் கண்ணாத்தாள்!

“…அதுக்கில்லெ புள்ளெ …”

“…என்னுங்க… நீங்க மனந்தேங் கறீங்க? இந்தப் பேச்சை உங்க அய்யனம்மாகிட்டெ ஆரம்பிச்சது உங்க அண்ணங்காரந்தானுங்கொ! ஆகுறபடிக்கு ஆகுட்டும். உங்களுக்கு என்ன கொறை வந்துறப் போவுதாமா…?

நமச்சிவாயமும், நாகரத்தினமும் வீட்டில் இல்லை.

எட்டிமடைக்கு காலையிலேயே போய்விட்டார்களென அம்மா சொன்னதிலிருந்து தெரிந்தது.

“ஜோசியம் பார்க்கப் போயிருக்கிறாங்களாமா…?

இவனுக்குப் பதிலெதுவும் சொல்லத் தோன்றவில்லை.

“வருசத்துக்குப் பத்துவாட்டி போயிப்போயி இப்பிடிப்பாத்துப் பாத்து கடைசிக்கு என்ன திட்டத்துல வந்து நிக்கிறாங்க பாத்தயா அம்மா.?

மனந்ததளராமல் இப்படிக் கேட்டதற்குப் பிறகு அவளால் விளக்கம் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“ இது உன்ர கண்ணாலத்துக்கும் மிந்தியே மொளச்சது சுப்பையா! அப்புறம் வீரண்ணனும் கதர் வேட்டி அய்யனும் தலையிட்டு எல்லார்த்துக்கும் கண்ணாலம் முடிஞ்சதுக்கும் பிற்பாடு சொத்தைப் பிரிச்சுடுறதுதா மொறையின்னு எடுத்துச் சொன்னதுனாலெ நின்னுது.?

“ச்செரி! இப்ப எனக்கு மட்டுலும் முடிஞ்சுட்டாப் போதுமா? எளையவன் ராசுக்கு உன்னமும் அது பாக்கியிருக்குதல்ல…”

“அது எங்குளுக்கு மறந்தாடா கண்ணு போயிரும்.எல்லாம் ஒரே குடும்பமா இருக்குறதுல கஷ்டமோ நஷ்டமோ மனசு தெம்பு கெடாம இருக்குதல்லப்பா..”

“பின்னே என்னம்மா அதுக் குள்ளெ எடையிலெ இடுவுந்து வந்துடுது.”

“என்னமோ…உன்ர அண்ணங் காரன் தானப்பா. சம்சாரத்துப் பேச்சைக் கேட்டுட்டு இந்த ஏற்பாட்டுல இருக்குறான்.”

ஓஹோ! அப்பிடியா..?”

“…அப்பிடித்தான்னு வெய்யே! மொண்டிமாரி வெடியாலயும் இங்கெ வந்து உங்க அய்யங்கிட்டப் பேசிட்டிருந்தான். வந்தும் போயி ஊருக்கு  வடக்கால குத்தகைத் தோட்டம் ஒண்ணெப் புடுச்சுட்டு பண்ணையம் நடத்தறானல்லொ சாமியப்பன்னு ஒருத்தன்…”

ஆமாஞ்சொல்லு.புல்லட் வண்டியிலெ இதுல அடிக்கடி போவானே அவனுக்கென்ன…?”

“அவனெல்லாம் சேந்துதா உங்க அண்ணங்காரனெ புத்தியெத் திருப்பியுட்டுட்டாங்க.”

“எப்பிடி?”

“காட்டெ வெல பண்ணச்சொல்லி முசுவுல நிக்கிறானப்பா உங்க அண்ணங்காரன்..”

“வாங்குறது யாராமா…?

“அவனாத்தா இருக்கும்னு சொல்றாங்க! என்னமோ புடுபுடு வண்டிலெ போறானுங்கிறியே அவனேதான்னு சொன்னங்க..”

“ச்செரி…அய்யன் சம்மதமில்லாம எப்பிடி காடு வெலையாகும்?”

“அய்யனும் சம்மதிச்சுத்தானப்பா ஆகோணும்?”

“என்னம்மா நீயும் இப்படிங்கிறியே.”

“நாங்கென்ன சாமி பண்றது? தலை நாளைல பொறந்தவன்!  எங்க பேச்செ அவனெங்கெ இப்பவெல்லா காதுல போட்டுக்கறான்?

எப்பிடியோ காட்டெ கை கழுவித்தான் ஆகோணுமாட்டத் தெரியுது.”

ம்…ம்…அப்பறம்…”

“அப்பறமென்ன? காட்டெ வித்து கெடைக்கிற பணத்தெ மூணாகப் பங்கி உங்க மூணு பேருத்துக்கு குடுத்தர்றம்னு அய்யன் ஒத்துட்டாரு.?

“நானும் என்ர தம்பிகாரனும் இதுக்கு ஒத்துக்கலீன்னா”

சற்றுக் குரலை உயர்த்தி சுப்பையன் பேசுவதில் இருந்தே அவனுக்குள் படபடப்பு வந்துவிட்டதை அம்மா உணர்ந்து கொண்டாள்.வெளியே லேசாக இருமி எச்சிலைத் துப்பியபடி மாசய்யன்  வந்து கொண்டிருப்பது கேட்டது.

இவர்களின் பேச்சு தடைப்பட்டது. அடுத்த சில நிமிட இடைவெளிக்குப் பிறகு…

“என்னுங்கய்யா அதுக்குள்ளெ இப்பிடி?என்னேயல்லா ஒரு பேச்சுக் கேட்டிருக்கலாமல்லொ…”

–              என்றான் அவரைப் பார்த்து.

“என்னெ பண்றது நெருக்கடி தாங்காமல் தானப்பா நானும் செரீன்னுட்டேன்…”

“செரித்தாம் போங்க…”

“ம்…ம்…

துண்டை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தபடி,

“குடிக்கிறதுக்குத் தண்ணி கொண்டா..”

என்றபடி உட்கார்ந்தார்.

“மலையடிவாரத்துக் காட்டெ என்ன பண்றதுன்னு ஓசுனெய்ங்க”?

“அதைய இப்பவெல்லாம் யாரு விக்கிறாங்க. இந்த ஊரோரத்துக் காட்டைத்தா குடுத்தர்லாம்னு”.

“புதுநகரமாகப் போகுது! அப்பறம் ஊடு கட்டுறவிகளுக்கு எச்சு வெலைக்கு விக்கிறதுக்குத் தோதுப்படும்னு கெடைச்ச காடுகளையெல்லா வாங்கிப் போடுறதுக்கு அவனவன் தூக்கமில்லாம திரியறானுக! எனக்கு தெரியுமுங்க..”

“அப்பிடி வாங்கி விக்கிறவன் எவனையோ தான் உங்க அண்ணங்காரனும் கூட்டியாந்தானப்பா..”

“ஓ.. ஹோ…”

“ம்… ம்…. ம்…”

அம்மா கொண்டு வந்த தண்ணீரை வாங்கிக் குடித்து விட்டு சொம்பைத் திண்ணையில் வைத்தார்.

“உங்க அண்ணங்காரனே காட்டைப் பிரிச்சு சென்டுக் கணக்குல சொந்தமா வித்தா எச்சுப் பணம் கெடைக்குமேன்னு மத்தவிக எங்கிட்டெச் சொல்றாங்க..”

“அப்பறம் ஏனுங்க இப்பிடி?”

“நாம பிரிச்சு வித்தா வெலையா காதாமா? அதுக்குன்னு ஏஜெண்டுக இருக்கறானுகளாமா! அவிக நம்ம கிட்டெ வந்து வாங்கி, அளந்து சென்டுக்கணக்காப் பிரிச்சு முட்டுக்கல்லுக நட்டு, அப்பறம் நாளாசரிதியா வெலை பண்ணிப் போடுவானுக…அப்பிடின்னு த கோலு…”

ச்செரி..”

அப்பறம் இன்ன ஒண்ணு சுப்பையா! என்ர மனசு ரெண்டு நாளா.. ஒரு நெலைல இல்லீடா..”

“என்னுங்கய்யா.. நாந்தா நேர்ல இப்பொ வந்துட்டேனல்ல மனசெத் தொறந்து சொல்லுங்க…”

குரல் தடுமாறியபடி கேட்டான்.

“இல்லெடா… சாமி…! நீயும் எளையவன் ராசுமு என்ர சொல்லெத் தட்ட மாட்டீங்கன்னு நல்லாத் தெரியும்..”

“ச்செரி… உங்க நெனைப்புல தப்பில்லெ….”

“வந்தப்பா… நம்ப காட்டெ விக்கிறதோட மட்டுலும் இல்லெ. நீ மேய்ச்சு பட்டி பெருக்கி வெச்சிருக்கியே ஆடுக! அதுகளையும் மூணு பங்காப் பிரிச்சுக் குடுத்துப் போடுங்கன்னு கொரவிளிப்புடியில கொண்டு வந்தாச்சு..”

அய்யன் தட்டுத் தடுமாறியவாறு சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்கவும் இவனின் மனம் பொறுபடாமல் கொந்தளிக்கத்தான் செய்தது.

“என்னுங்கய்யா..”

அவன் கண்களில் சுழன்று கொண்டு வந்த கலக்கத்தைப் பார்த்து கண்ணாத்தாளுக்குப் பயம் வந்துவிட்டது.

“ஏனம்மா! என்னது இதுகெல்லாம்? மொதல்லெ காட்டைப் பிரிக்கிறதுன்னீங்க. அப்பறம் ஆடுகளையும்னு சொல்றீங்க! உனி இந்த ஊட்டையும்னு  சொல்லப் போறீங்களோ என்னமோ! இதுக்கும் மேல நாங்காதுல வாங்கித் தாங்கிக்க கொழப்பிக்காமல் சிவனேன்னு இருங்க. நா ஆற அமர தம்பிக்காரனோட கலந்து பேசி அப்பறம் அதுக்கும் பிற்பாடு என்ன பண்ணுலாம்கிறதெ உங்களுக்குச் சொல்றனே..” என்றான்.

தான், இன்னமும் சிலவற்றைச் சொல்லலாம் என மனத்துடிப்போடு அருகில் வந்த கண்ணாத்தாளுக்கு, அதையெல்லாம் கேட்டால் அண்ணன் தம்பிகளுக்குள் பெரிய ரகளையே உண்டாகிவிடும் என்கிற அனுமானிப்புத் தோன்றியது. மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

(தொடரும்)….