ரஜினி மீண்டும் அரசியல் பிரவேசம் செய்கிறாரா?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் சந்திப்பை உற்று நோக்கும்போது நடிகர் ரஜினி மீண்டும் அரசியல் பிரவேசம் செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாகவே அரசியல் கருத்துகளை பொதுவெளியில் சொல்ல தயங்கும் நடிகர் ரஜினி, ஆளுநர் ரவியை சந்தித்தப்பின் வெளியிட்ட கருத்துகளை பார்க்கும்போது மீண்டும் அவர் அரசியலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட தயாராகிவிட்டார் என்பதையே உணர்த்துவதாக அரசியல் திறன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆளுநர் தமிழகத்தின் மீது பற்றுக்கொண்டவராக இருப்பதாகவும், தமிழகத்துக்காக உழைக்கக்கூடியவராக இருப்பதாகவும் நடிகர் ரஜினி கருத்து தெரிவித்திருந்தார். கடந்த வாரம் தில்லியில் நடந்த மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுபடுத்தும் நிகழ்ச்சியில், பங்கேற்ற நடிகர் ரஜினி அதன் பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தில்லியில் இருந்து வந்த உடன் ஆளுநர் ரவியையும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டு டிசம்பரில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ரஜினி, பெரிய அளவில் அரசியல் கருத்துகளை தெரிவிக்காமல்தான் இருந்தார். 2021 பேரவைத் தேர்தலிலும் யாருக்கும் ஆதரவாகவும் ரஜினி குரல் கொடுக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை ரஜினி சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வந்தனர்.
இதற்கிடையே கருணாநிதி சிலை திறப்பு விழா, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா உள்ளிட்டவற்றில் நடிகர் ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலினும் முக்கியத்துவம் கொடுத்தார்.

இப்படிப்பட்ட சூழலில் தான் ஆளுநரை ரஜினி சந்தித்துவிட்டு ஆளுநருக்கு ஆதரவாக கருத்துகளை பதிவு செய்துள்ளார். இப்போது அதிமுகவில் குழப்பம் நீடிக்கும் சூழலில் 2024 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக ரஜினி குரல் கொடுத்தால் அந்த அணி திமுகவுக்கு மாற்றாக வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதை மையமாக வைத்து தான் அரசியல் நகர்வுகள் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. திறமையான பிரதமர், நிலையான ஆட்சி என்பதை முன்னிறுத்தி பிரதமர் மோடிக்கு ஆதரவாக நடிகர் ரஜினி பிரசாரம் செய்யும் வாய்ப்பும் உள்ளது. ஒரு வேளை ரஜினி அப்படிப்பட்ட முடிவை எடுத்தால் தமிழகத்தையும் தாண்டி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கைகொடுக்க வாய்ப்புள்ளது. இதை மையமாக வைத்து தான் பாஜக தலைமை ரஜினியை அணுகியிருக்கக்கூடும்.

நடிகர் ரஜினியைப் பொறுத்தவரை தன்னால் முடிந்தவரை தேசிய எண்ணம் கொண்ட சக்திகளுக்கு தமிழகத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கக்கூடும். ரஜினியின் கடந்த கால அரசியலை உற்றுநோக்கினால் 1996 இல் இருந்தே ரஜினியை முதல்வர் வேட்பாளராக பார்க்கும் பார்வை உருவாகிவிட்டது. திருநாவுக்கரசர், ஜி.கே.மூப்பனார் முயற்சியில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவை ரஜினி சந்தித்தது, முதல்வரை திரையரங்குகளில் மக்கள் தேடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது, நடிர் ரஜினிக்கு முதல்வர் வேட்பாளர் என்னும் அந்தஸ்தைக் கொடுத்தது.

1996 பேரவைத் தேர்தலில் தி.மு.க மற்றும் த.மா.க கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தது அந்த அணியின் வெற்றிக்கு உந்து சக்தியாக இருந்தது. குறிப்பாக காங்கிரஸ் முழுமையாக த.மா.க.-, வாக மாற அண்ணாமலையின் சைக்கிள் சின்னம் உதவியது. பிறகு 1998 இல் ரஜினியின் முயற்சியால் அந்த அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை. காரணம், கோவை குண்டுவெடிப்பு, வாஜ்பாயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டது, அதிமுக, பாஜக, பாமக அணி 30 தொகுதிகளில் வெற்றிபெற உதவியது.

பிறகு 2004 மக்களவைத் தேர்தலில் பாமகவை தோற்கடிக்க ஒட்டுமொத்தமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ரஜினி எதிர்த்தார். அப்படிப்பட்ட சூழலில் திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் என அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்ததால் பாமகவுக்கு எதிராக ரஜினியின் குரல் எடுபடவில்லை. பிறகு 2017 இல் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அரசியலுக்கு வருவதற்கான அனைத்துப் பணிகளையும் தொடங்கினார் ரஜினி.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு வந்த பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என ரஜினி கூறியிருந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும், பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும் அறிவித்தார். 2020 மார்ச் சென்னையில் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் ரஜினி. அதில் தான் முதல்வராக போட்டியிடப்போவதில்லை என்றும், பிற கட்சிகளில் இருந்து வருவோர்களுக்கும், நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களுக்கும் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்போவதாக தெரிவித்தார். 2021 பேரவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

கொரோனா பரவல் காரணமாக பெரிய அளவில் அரசியல் நகர்வுகள் நடக்கவில்லை. ஆனால், அதற்கு முன்பு திருப்பூர், மதுரை, போன்ற இடங்களில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. பிறகு யாரும் எதிர்பாராத நேரத்தில் 2020 டிசம்பர் மாதத்தில், தான் அரசியலுக்கு வரப்போவதாகக்கூறி அறிக்கை வெளியிட்டார் ரஜினி. ஆனால், 3 வாரங்களுக்கு பிறகு ஹைதராபாத்தில் அண்ணாத்த படபிடிப்பின்போது தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அரசியலில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார்.
இப்படிப்பட்ட சூழலில் நேரடி அரசியலில் வராமல் 1996 பேரவைத் தேர்தல் போல தேசிய ஜனநாயக கூட்டணிக்காக குரல் கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.

பாஜகவுக்கு ஆதரவு தருகிறாரா ரஜினி?

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, தமிழக அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஆளுநர் ரவி, நடிகர் ரஜினி சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு. 2019 இல் இருந்தே ஸ்டாலினுக்கு நிகரான தலைவர்கள் தமிழகத்தில் இல்லை. திமுகவுக்கு நிகராக அதிமுக உள்ளது. ஆனால், ஸ்டாலின் ஒற்றைத் தலைமையாக நிமிர்ந்து நிற்கிறார். அதேநேரத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என்ற இரட்டைத் தலைமை இப்போது இரண்டு ஒற்றைத் தலைமையாக மாறிவிட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக, பிரதமர் மோடிக்கு ஆதரவாக குரல் கொடுக்க ரஜினியால் முடியும்.

ஆளுநரை நடிகர் ரஜினி சந்திப்பது முக்கியம் அல்ல. ஆளுநரை புகழ்ந்து பேசியது தான் முக்கியத்துவம் பெறுகிறது. ஆளும் கட்சியின் முரசொலியில் ஆளுநருக்கு எதிரான கட்டுரைகள் அதிகம் வருகின்றன. பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதல்வர் தான் என பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, நீட் மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னும் கையெழுத்திடவில்லை. அண்ணாமலை மட்டுமே எதிர்ப்பு அரசியல் செய்கிறார்.

பழனி, ஈரோடு, தருமபுரி, திருவண்ணா மலை, வடதமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியும், தென் மாவட்டங்களில் பன்னீர்செல்வமும் கூட்டத்தைக் காட்டி தங்களது செல்வாக்கை தக்கவைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஸ்டாலினுக்கு நெருக்கடி தந்து அரசியல் செய்ய பாமக தயாராகவில்லை. திமுக தேர்தல் அறிக்கையின்படி முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும், குடிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்தவில்லை என சீமான் கேள்வி எழுப்புகிறார். கமல் அறிக்கைகளில் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார். திமுகவுக்கு எதிராக தீவிர எதிர்ப்பை எந்த ஒரு அரசியல் கட்சியும் பெரிய அளவில் செய்யவில்லை.

ஸ்டாலினுக்கும், ஆளுநர் விரோதம் மட்டுமே முக்கியமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆளுநருக்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்துள்ளது, பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிமுக இரு பிளவுகளாக இருக்கும் நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான வாக்குகளை பாஜகவுக்கு ஆதரவாக ஒருமுகப்படுத்த நடிகர் ரஜினியின் குரல் உதவிகரமாக இருக்கும் என்றார் ரிஷி.