முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று  காலை கோல்கட்டாவில் காலமானார். அவருக்கு வயது, 89.

சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 2 மாதங்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆகஸ்ட் 8 ம் தேதி அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதால் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் அதற்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

1968 ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இவர், அக்கட்சியில் முக்கிய தலைவராக திகழ்ந்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின் போது 2004 ம் ஆண்டு லோக்சபா சபாநாயகராக நியமிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் சபாநாயகராக நீடித்தவர். 2008 ம் ஆண்டு காங்., உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மார்க்சிஸ்ட் கட்சி தனது ஆதரவை விலக்கி கொண்டது. இதனால் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது அரசுக்கு எதிராக ஓட்டளித்ததால் சோம்நாத், சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருந்தும் பதவி விலக மறுத்து தொடர்ந்து சபாநாயகராகவே நீடித்தவர் சோம்நாத்.

அதிக காலம் லோக்சபா சபாநாயகராக நீடித்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.