குளங்களில் பெடல் படகுகளை இயக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவை உக்கடம், பெரியகுளம், வாலாங்குளத்தில் டீசல் மோட்டார் படகுகள் இயக்குவதை கைவிட்டு, பெடல் படகுகளை இயக்க வேண்டும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உக்கடத்தில் உள்ள, பெரியகுளம், வாலாங்குளம் ஆகிய இரண்டு குளங்களில் மத்திய பாஜக அரசின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு சுற்றுலா துறை மூலம் டீசல் மோட்டாரில் இயங்கும் படகுகளை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த இரு குளங்களிலும் மீன்களை வளர்த்து, 500 க்கும் அதிகமான உள்ளூர் மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் நூற்றாண்டு காலமாக, அங்கேயே வசிக்கும் பாரம்பரிய மீனவர்கள். அவர்களின் வாழ்வாதாரமே இந்த குளங்களை நம்பியே உள்ளன. குளங்களில் டீசல் மோட்டார் படகுகளை இயக்கினால், மீன்கள் வளர்வது பாதிக்கப்படும். இங்கு வளரும் மீன்களில் டீசல் வாசம் வந்து, மக்கள் யாரும் வாங்க மாட்டார்கள். இதனால், எங்கள் வாழ்வாதாரமே அழிந்து விடும் என, கோயமுத்தூர் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சங்கத்தின் நிர்வாகிகள் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஊட்டியில் உள்ள ஏரியில் டீசல் மோட்டார் படகுகள் இயக்கப்பட்டதால், மீன்களில் டீசல் வாசத்தினால், விற்க முடியாத நிலை ஏற்பட்டதையும், மீனவர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகரங்களில் படகுகளை இயக்குவது என்பது, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது. குளங்களில் டீசல், பெட்ரோல் மோட்டார் படகுகளை இயக்குவது தேவையற்றது.

கோவை மாநகர மக்களின் பொழுதுபோக்கிற்கு உக்கடம் பெரியகுளம், வாலாங்குளங்களில், காலால் பெடலிங் செய்யும் படகுகளை இயக்கினால், மாநகர மக்களுக்கும், குறைந்த கட்டணத்தில் நல்ல பொழுதுபோக்கு அனுபவமாக அமையும். குளங்களை நம்பி வாழ்வை நடத்தும் மீனவர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இருக்காது. எனவே, டீசல் மோட்டார் படகுகளை இயக்கும் முடிவை கைவிட்டு பெடல் படகுகளை விட தமிழ்நாடு சுற்றுலா துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும்போது சம்பந்தப்பட்ட மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த பிறகே செயல்படுத்த வேண்டும். இதனை ஒரு கொள்கையாகவே தமிழக அரசு அறிவித்து செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.