இது புத்தரின் பூமியா?

பூமியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அன்பை போதித்தவர் புத்தர். அகிம்சை, அன்பு, உயிர்களைக் கொல்லாமை என்பனவற்றை தன் வாழ்வியலாக கொண்டு உலகிற்கும் உபதேசித்தவர். ஆனால் புத்தரின் பாணியை பின்பற்றுவதாகக் கூறும் இரு நாடுகளில் சமீபத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றன. ஒன்று, ஜப்பானில் பலமுறை பிரதமராக இருந்த ஷின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்டது. இரண்டாவது, நமது அண்டை நாடான இலங்கையில் நடைபெற்றுவரும் கலவரங்கள். இவை இரண்டும் அறம் தவறி நடைபெற்ற செயல்கள் என்பதோடு 21ஆம் நூற்றாண்டு மனிதர்களும், மனிதமும் எவ்வாறு இருக்கின்றன என்பதற்கு நிகழ்கால சாட்சியாக எழுந்து நிற்கின்றன.

முதலில் ஜப்பான், உலகில் மனிதனுக்கு மனிதன் செய்யும் கொடுமையை, வன்முறையை, வலியை பெருமளவு அனுபவித்த நாடு என்று ஜப்பானை தான் சொல்ல வேண்டும். இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களிலேயே கொடுமையானது, மற்ற ஆயுதங்களை விட பல நூறு மடங்கு சக்தி வாய்ந்தது என்றால் அது அணு ஆயுதம் தான்.

அணுகுண்டு தான் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது இரண்டு முறை வீசப்பட்டது. ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு நகரங்கள் சாம்பலாகி, லட்சக்கணக்கான ஜப்பானிய பொதுமக்கள் மரணத்தைத் தழுவினார்கள். இன்னும் பல லட்சம் பேர் சாகும் வரை அந்த பாதிப்பிலிருந்தே மாண்டார்கள். ஜப்பானியப் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு போனது. ஜப்பான் தனது போர் நடவடிக்கைகளை விட்டு சரணடைந்தது. அது ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் ஒரு கடுமையான பாடமாக மாறியது. அணு ஆயுதத்தை தயாரிப்பதை நிறுத்தி மக்களுக்கு உற்பத்திப் பொருட்களை நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கின. ஜப்பான் வீழ்ச்சியில் இருந்து மீள அதற்கு பல ஆண்டுகள் ஆகின. இதனால் ஒரு நன்மையும் விளைந்தது. ஆயுதம், வன்முறை இவற்றால் ஏற்படும் தீமையை மனிதகுலம் முழுமையாக கண்ணால் கண்டது. அதனால் ஜப்பான் அகிம்சையை கடைப்பிடிக்கும் நாடாகவும், அணு ஆயுதத்தை எதிர்க்கும் நாடாகவும் மாறியது. தனது பொருளாதார வலிமையால் உலகை கவரத் தொடங்கியது. ஜப்பானியர் அமைதி தூதுவர்களாக மாறினார்கள்.

ஆனால், தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் மீண்டும் மனித மனங்களில் இருக்கும் சாத்தானை வெளிக் காட்டி இருக்கிறது. முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே தனது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் கடைபிடித்து வந்த அன்பு, அகிம்சை என்னும் அடித்தளம் ஆட்டம் கண்டிருக்கிறது என்ற எண்ணம் எழுகிறது.

அணுஆயுதம் போன்றவற்றுக்கு எதிராக எழுப்பிய உறுதியான சுவர் சற்று விரிசல் கண்டு இருப்பதாக தோன்றுகிறது. தானே தயாரித்த துப்பாக்கியை கொண்டு தனது சொந்த காரணங்களுக்காக பொதுவாழ்வில் இருந்த ஒரு அரசியல்வாதியை, முன்னாள் பிரதமரை கொலை செய்திருக்கிறான். தனிப்பட்ட முறையில் ஜப்பான் ஒரு வளர்ந்த நாடு. பொறுப்பான குடிமக்கள் என்ற பெயர் எடுத்தவர்கள். உலக அளவில் அமைதியை விரும்பும் நாடு, பொருளாதார வளம் படைத்த நாடு. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளைப் போல கலவர பூமி அல்ல, பற்றாக்குறையுள்ள நாடு இல்லை.

இந்த நிலையில் புத்தரின் பூமியில் இது ஏன் நடந்தது என்று எண்ணிப் பார்க்கவேண்டும். எட்டிப்பார்க்கும் சாத்தானை மீண்டும் கட்டி வைக்க வேண்டும்.அடுத்து இலங்கை, கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நாட்டின் பொருளாதாரம் கீழே சரிந்து கொண்டே போவதை காணமுடிகிறது. பல பத்தாண்டுகளாக இன மோதல்கள், கலவரங்கள் தொடர்ந்து வந்த போதும், பொருளாதாரம் இவ்வளவு வீழ்ச்சி அடைந்து மக்கள் தெருவில் இறங்கிப் போராடும் அளவுக்கு நிலைமை சீர் கெட்டுப் போகவில்லை. உணவுத் தட்டுப்பாடு, பால் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, அன்னியச் செலாவணி தட்டுப்பாட்டு, மின்சார தட்டுப்பாடு என்று தட்டுப்பாட்டின் தலைநகரமாக மாறியிருக்கிறது.

கூட்டம் கூட்டமாக மக்கள் வீதிக்கு வந்தார்கள். எதிர்ப்பு கலவரமாக மாறி இலங்கை அதிபர் ராஜபக்சவை நாட்டை விட்டே ஓடி ஒளிய செய்திருக்கிறது. ராணுவ ஆட்சி, கொடுங்கோலர்களுக்கு கிடைக்கும் தண்டனை கிடைத்திருக்கிறது. ஏதேதோ காரணங்கள் சொல்லி ஆட்சிக்கு வந்த ராஜபக்ச சகோதரர்கள் இன்று விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

குடும்ப ஆட்சியின் காரணமாக பல பதவிகளை வகித்த சகோதரர்கள் இன்று மக்களின் கடும் எதிர்ப்பை சந்திப்பதற்கு ஆளாகியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் ஆடம்பர வாழ்வு, பொருளாதார முட்டாள்தனங்கள் இலங்கையை சீரழிய செய்துவிட்டன. உலகின் மற்ற நாடுகளும், ஏன் உலக வங்கியும் கூட கைவிட்டு விட இலங்கை மக்கள் தெருவில் நிற்கிறார்கள்.

தொப்புள் கொடி உறவான இந்தியா, குறிப்பாக, தமிழ்நாடு மட்டும் தார்மீக அடிப்படையில் உதவிகளை செய்து வருகிறது. புத்தரின் பூமியில் ஏன் இப்படி நடக்கிறது என்று யோசிக்க வேண்டும். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்னார். ஆனால் ஆட்சியாளர்கள் அப்படி அல்ல, அதை தாண்டி பேராசையே எங்கள் கொள்கை என வாழ்ந்தது இன்று பொதுமக்களுக்கும் சேர்ந்து கொடுமையாக முடிந்திருக்கிறது.

கண்ணதாசன் சொன்னது போல ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அந்த பேசத்தெரிந்த மிருகங்களை நாட்டைவிட்டு அனுப்பிவிட வேண்டும் என்று தான் தோன்றுகிறது. அந்த வகையில் இந்த சிக்கல்கள் விரைவில் முடிவுக்கு வர வேண்டும், மக்கள் நிம்மதி பெற வேண்டும்.