கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு யார் காரணம்?

கள்ளக்குறிச்சியில் ஒரு கலவரம் நடந்து முடிந்திருக்கிறது. அமைதிப் பூங்கா என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தில் இப்படி ஒரு கலவரம் நடந்து முடிந்திருக்கிறது. ஒரு பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவரின் மரணம் இந்த கலவரத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஒரு வன்முறை வெறியாட்டத்தில் பள்ளி வளாகம் முற்றிலுமாக சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இது ஏதோ உணர்ச்சி வசப்பட்ட ஒரு சிறு கூட்டம் செய்த செயல் என்று எடுத்துக்கொள்ள முடியாது. நமது தமிழகத்தின் மீது விழுந்த கரும்புள்ளி என்றுதான் கொள்ள வேண்டும். நமது மனசாட்சிக்கு இது ஒரு பெரிய கேள்வியை முன்வைத்து உள்ளது.

தற்போது அங்கு நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் சிறிது குறைந்து அமைதி திரும்பி உள்ளது. என்றாலும் சிக்கல் இன்னும் தீர்ந்து விடவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார். புதிதாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் தலைமையில் அமைதி திரும்பவும், நிலை பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது.

முதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்ப்போம். கொலையோ, தற்கொலையோ, அதைத் தாண்டி பெற்று வளர்த்த மகளை இழப்பது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. இந்திய பெற்றோர்களின் எதிர்காலமே அவர்களின் குழந்தைகளின் நல்வாழ்வு தான். இந்த நிலையில் மாணவியின் மரணம் குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும். தற்கொலைதான் என்றால் அதற்கான உளவியல் காரணங்கள் கண்டறியப்பட்டு இனி இவ்வாறு ஒரு மரணம் கூட நிகழாமல் தடுத்து நிறுத்தப்படவேண்டும். இன்னொருபுறம் பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகம். ஒரு நிறுவனத்தின் சொத்து முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு இருக்கிறது. இது சாதாரணமானதல்ல. ஒன்றை உருவாக்குவது கடினம்: மீண்டும் உருவாக்குவது என்பது மிக மிகக் கடினம், உடைப்பது என்பது சுலபம். அதுதான் இப்பொழுது அங்கே நடந்திருக்கிறது.

பள்ளி, மருத்துவமனை ஆகியன இன்று வரை வணிகம் சார்ந்து இயங்கினாலும் கூட அவற்றை முழுக்க முழுக்க அதே கண்ணோட்டத்துடன் சமூகம் பார்ப்பதில்லை. மனித வாழ்க்கையை உருவாக்குவதையும், நோயின்றி பராமரிப்பதையும் ஆசிரியர் தொழிலும், மருத்துவத் தொழிலும் நோக்கமாகக் கொண்டு இருப்பதே இதற்கு காரணம் என்று கூறலாம்.

அப்படி இருக்கும் பொழுது ஒரு பள்ளி இவ்வாறு சூறையாடப் பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள ஆயிர கணக்கான தனியார் பள்ளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சில மறைமுகமான செய்திகளை இந்த சம்பவம் தெரிவிப்பது போல இருக்கிறது என்கிறார்கள். இது அமைதியான ஒரு சமூகத்துக்கு நல்லது அல்ல. பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் சேவை நோக்கம் குறைவாகவும் வணிக நோக்கமே அதிகமாகவும் கொண்டு இயங்குகிறது என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக வலுத்து வருவது உண்மை. ஆனால் அதையே காரணம் காட்டி இக்கட்டான சிக்கலான சூழ்நிலைகளில் இது போன்ற கொடிய சம்பவங்கள் நடப்பது தவறு. ஒரு ஜனநாயக நாட்டில் நீதி கேட்பதற்கு இதைவிட பல நல்ல வழி முறைகள் உள்ளன. இன்னும் நீதியின் பெயரிலும், நியாயத்தின் பெயரிலும், சட்டத்தின் வழிமுறைகளிலும் நம்பிக்கை உள்ளதாகவே நமது நாடு இருக்கிறது.

மூன்றாவதாக காவல்துறை. இந்த சம்பவம் முழுக்க முழுக்க காவல்துறையானது, சூழ்நிலையை தவறாகக் கையாண்டதால் தான் உருவானது என்று ஒரு தரப்பினர் வலுவாக கூறும் அளவுக்கு இந்த கலவரம் வெடித்துள்ளது. முதலிலேயே இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து தொடர்புடையவர்கள் கலந்து பேசி சட்ட நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும். அடுத்தடுத்து சம்பவங்கள் ஒரே நொடியில் நடப்பதில்லை. காவல்துறை என்பது ஒரு தனி மனிதன் அல்ல. அது ஒரு சர்வ சக்தி வாய்ந்த துறை என்றே கூறலாம். அதற்கென்று பல அதிகாரங்களும் வசதிகளும் உள்ளன.

உணர்ச்சி வசப்பட்டு செய்யப்படும் ஒரு கொலையோ, அல்லது உலக அளவிலான குற்றச் செயல்களை தவிர்ப்பது போன்றவையோ வேண்டுமானால் முடியாமல் போகலாம். ஆனால் இதுபோன்ற சம்பவங்களில் உளவுத்துறை மூலம் கிடைக்கும் தகவல்களை கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பெரிய சேதத்தை தடுத்து இருக்கலாம். இவ்வளவு பேர் கூடுவதை தவிர்க்க முடியாவிட்டாலும், அவர்களை தடுத்து இருக்கலாம். அதை செய்ய தவறிய காவல்துறை மீது அனைத்து தரப்பிலும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதன் விளைவாக இன்று இவ்வளவு பெரிய கலவரம் வெடித்திருக்கிறது.

நான்காவதாக திரைப்படங்களில் வருவது போல காட்சிகள் அரங்கேறி, கூட்டம் கூட்டமாக சமூகவிரோதிகள் வந்து, அவர்கள் கையாண்ட வழிமுறைகள் அதிர வைக்கின்றன. இந்த வன்முறையை பார்க்கும் பொழுது மிக மோசமான அறிகுறிகளைக் கொண்டு இருக்கிறது. இதைக் கண்டறிந்து உடனடியாக களைய வேண்டியது மிக முக்கியமான செயலாகும்.

இதில் இருந்து மீண்டு வெளியே வரக் கூடிய வழிமுறைகளை அரசு மற்றும் நிர்வாக துறைகளும் இணைந்து வழிவகைகளை கண்டறிய வேண்டும். அதற்கு பொதுமக்களும், சமூகம் சார்ந்த அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டியது அவர்களுடைய கடமை. தேவையற்ற பயங்களைத் தவிர்த்துவிட்டு எதிர்காலத்தில் என்ன செய்வது என்று யோசிப்பது அனைவருக்கும் நல்லது.

தற்போது நடைபெற்றுள்ள சம்பவத்திற்கு நீதி கிடைப்பது, அதற்காக செயல்படுவது என்பது ஒருபுறம். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் துளியும் நடைபெறாமல், அதாவது பள்ளி மாணவியின் மரணம் தொடங்கி வன்முறைகள் வரை நடைபெறாமல் தடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.