கே.எம்.சி.ஹெச் சார்பில் இலவச மருத்துவ முகாம்

கே.எம்.சி.ஹெச் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சார்பில் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

ஜூன் 12, 19, 26 மற்றும் ஜூலை 3 ஆம் தேதி நடைபெற்ற இம்முகாமில் கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினர்.

இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு, மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு, கல்லீரல் இரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன், கொலஸ்ட்ரால் பரிசோதனை, சீறுநீரக இரத்தப்பரிசோதனை, இரத்த சோகை பரிசோதனை, இரத்த குழாய் பரிசோதனை மற்றும் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவுக்கு பின் தேவைப்படும் நபர்களுக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இலவச சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவம் பயிலும் மாணவர்கள் ஏழை எளிய மக்களின் உடல் நலப் பிரச்சினைகளை அறிந்துகொள்ளவும், அவர்களின் நோய்களை ஆராய்ந்து அதற்கேற்ப தரமான மருத்துவ சேவை அளித்திடவும் இந்த முகாம் அமைந்தது. இந்த இலவச மருத்துவ முகாம் மூலம் சுமார் ஆயிரம் பேர் பலன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை அளித்தது மிகுந்த மனநிறைவு அளிப்பதாய் இருந்தது என்று கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற முகாம்களை கோவையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடத்திடவும் திட்டமிட்டுள்ளதாவும் அவர்கள் தெரிவித்தனர்.