காருண்யா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

கோவை, காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) 26 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

துணைவேந்தர் மன்னார் ஜவஹர் வரவேற்றார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவரும், விண்வெளித்துறைக்கான இந்திய அரசின் செயலாளருமான சோமநாத் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

அவர் பேசுகையில், உங்களின் கடின உழைப்பினாலும், அர்ப்பணிப்பினாலும் வெற்றிகரமாக படித்து பட்டம் பெறுகிறீர்கள். இன்று சவால்கள் நிறைந்த ஒரு புதிய கட்டத்திற்கு உங்கள் வாழ்வு நகருகின்ற தருணம். தைரியமாக, அறிவுப்பூர்வமாக சவாலான தொழில் வாய்ப்புகளை தேர்ந்தெடுங்கள். தற்போதைய விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்களின் சவால்கள் முந்தைய தலைமுறையினரின் சவால்களினின்று வேறுபட்டவை. எனவே அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் மற்றும் ஆழ்ந்த ஆராய்ச்சி அனுபவம் பெற்றவர்களால் மட்டுமே பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். எனவே, கற்றல் உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்.

உங்களிடம் பேரார்வம் இருக்க வேண்டும். எப்போதும் மாணவராகவே இருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பணிவோடும் நேர்மையோடும் நடந்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நமது நாட்டை வலிமையாக மாற்றுவதற்கு நீங்கள் கற்ற கல்வியை ஒருங்கிணைத்து பயன்படுத்துவது அவசியம் என்றார்.

காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் தலைமை தாங்கி 1698 மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் முதுகலை பொறியியல் துறையில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் தங்களின் சமுதாய பற்றினை பறைசாற்றும் வண்ணமாக, சீஷா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டியும், நான்கு சக்கர நாற்காலிகளையும் வழங்கினர்.

பட்டமளிப்பு விழாவில், இவாஞ்சலின் பால் தினகரன், டிரஸ்டி சாமுவேல் தினகரன், துணைவேந்தர் மன்னர் ஜவஹர், இணை துணைவேந்தர்கள் ரெட்லிங் மார்கரேட் வாலர், இ.ஜே. ஜேம்ஸ், பதிவாளர் எலைஜா பிளசிங், பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எலிசபெத் மற்றும் பட்டம் பெற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.