எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கையில் போக்குவரத்து பாதிப்பு

இலங்கையின் நிலவும் பொருளாதார நெருக்கடியின் ஒரு பகுதியாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள வீதிகள் பெருமளவில் வெறிச்சோடி காணப்படுவதுடன், போக்குவரத்தும் முடங்கியுள்ளன.

இலங்கைக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசிடம் போதிய பணம் இல்லாததால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

சுகாதாரம், போக்குவரத்து, அத்தியாவசிய உணவு பொருள் விநியோகம், முப்படை உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருளை விநியோகிக்க இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் தீர்மானித்திருந்தது. அத்தியாவசியமற்ற வாகனங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை இலங்கை கடந்த வாரம் நிறுத்தியதோடு, அடுத்த வாரம் வரை தனியார் வாகனங்களுக்கான எரிபொருள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் / டீசலின் விலை ரூ.450க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.

இதுகுறித்து அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருப்பதாவது: இலங்கையில் 12,774 டன் டீசல் மற்றும் 4,061 டன் பெட்ரோல் மட்டுமே இருப்பு உள்ளது. இது நாட்டின் ஒருநாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும். கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் மத்திய வங்கி 125 மில்லியன் டாலர்களை மட்டுமே விடுவித்துள்ளது. இதனைக் கொண்டு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை முழுவதும் 10 சவீதத்திற்கும் குறைவான பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 1000 தனியார் பஸ்களே தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவிக்கிறார்.