ரிலையன்ஸ் ஜியோ புதிய தலைவராக ஆகாஷ் அம்பானி நியமனம்

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி அந்நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

ஜியோ நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானிக்கு பதிலாக அவரது மகன் ஆகாஷ் அம்பானி தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் சார்பாக, நேற்று நடைபெற்ற ரிலையன்ஸ் குழுமத்தின் கூட்டம் ஒன்றில், குழுவின் தலைவராக ஆகாஷ் அம்பானியை நியமிப்பதற்கு நிறுவனத்தின் இயக்குநர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி தனது பதவியை ராஜினாமா செய்த போதிலும், அனைத்து ஜியோ டிஜிட்டல் சேவை பிராண்டுகளுக்கும் சொந்தமான முதன்மை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டின் தலைவராக முகேஷ் அம்பானி தொடர்ந்து இருப்பார்.

மேலும், ஆகாஷ் அம்பானி தவிர அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் பவார், கூடுதல் இயக்குநர்களாக ரமிந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி. சவுத்ரி, ஆகியோர் பொறுப்பேற்று உள்ளனர்.

ரிலையன்ஸ் குழுமத்தில் ஏற்படும் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக தனது பிள்ளைகள் கூடுதல் பொறுப்புகளை எடுத்துக்கொள்வர்கள் என சென்ற ஆண்டு முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.