ஜூலை 17 திட்டமிட்டபடி NEET தேர்வு நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் திட்டமிட்டபடி ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் NEET – UG தேர்வை எந்த காரணத்தைக் கொண்டும் தள்ளிவைக்க முடியாது எனவும் கூறியுள்ளது.

நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.

நீட் தேர்வு நடைபெறும் நேரத்தில் பல்வேறு தேர்வுகள் நடப்பதால் நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்தனர்.

இளங்கலை படிப்பில் சேருவதற்கான கியூட் தேர்வு ஜூலை 15 ஆம் தேதியும், ஐ.ஐ.டி. யில் சேருவதற்கான ஜே.இ.இ. மெயின் தேர்வு ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மாணவர்கள் பல தேர்வுகளை எழுத முயற்சி மேற்கொள்வதால் சிரமம் ஏற்படும். இதனால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி வருகிற ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை விளக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் சி.யு.இ.டி தேர்வும், ஜூலை 21 முதல் 30 வரையிலும் நடைபெறும் ஜே.இ.இ. தேர்வும் திட்டமிட்டபடி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.