ஒரே நேரத்தில் 3 பெரிய நிறுவனங்களில் வேலை: கோடிகளில் ஊதியம் பெற போகும் மாணவன்!

கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர் பிசாக் மொண்டல். இவர் தனது படிப்பை நிறைவு செய்வதற்கு முன்பே உலகின் முன்னணி நிறுவனங்களான அமேசான், கூகுள், ஃபேஸ்புக்கில் பணி நியமன ஆணையை பெற்றுள்ளார்.

வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் மொண்டல். இவரது தயார் ஒரு அங்கன்வாடி ஊழியர். சிறுவயதில் இருந்தே தனது மகன் சிறந்த மாணவர் எனக் கூறும் அவரது தாயார், தனது மகன் பெரிய உயரங்களை எட்டுவதற்கு போராடியதாக கூறுகிறார்.

அமேசான், கூகுளை விட ஃபேஸ்புக் நிறுவனம் அதிக ஊதியம் தர முன்வந்ததால் அங்கு பணியில் சேர மாணவர் மொண்டல் அவர் முடிவு செய்துள்ளார். ஃபேஸ்புக் நிறுவனம் இவருக்கு வருடம் ரூ.1.8 கோடியை ஊதியமாக தர முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் பெற்ற மிக உயர்ந்த ஊதியம் இதுவாகும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் லண்டனுக்கு சென்று ஃபேஸ்புக்கில் இணைந்து பணியாற்ற உள்ளார்.

இதுகுறித்து மாணவர் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக, அமேசான், Facebook மற்றும் Google ஆகியவற்றிலிருந்து முழு நேர வேலைக்கான பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளேன். இது தனது நீண்டநாள் ஆசை என தெரிவிக்கும் அவர், இந்த அற்புதமான வாய்ப்புக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்கிறார்.

கொரோனா தொற்றின் போது, பல நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்ததாகவும், பாடத்திட்ட ஆய்வுகளுக்கு வெளியே அறிவைச் சேகரிக்கும் வாய்ப்பைப் பெற்றதாகவும் கூறுகிறார். இது நேர்முகத் தேர்வில் வெற்றிபெற உதவியது என்றார்.

கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களை விட ஃபேஸ்புக் அதிக சம்பள பேக்கேஜ் வழங்கியதன் காரணமாக ஃபேஸ்புக்கை தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார்.