பழமையும், புதுமையும் இணைந்த சங்கமம்! – சாய் விண்டேஜ் கலெக்ஷன்

வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் பழமை குணம் மாறாத பொருள் என்றால் மனம் இன்னும் அலாதி விருப்பம் கொள்ளும். இதற்காகவே பல முயற்சிகள் எடுத்து, தனது தாயாருடன் பயணம் மேற்கொண்டு, அபூர்வமான பொருட்களை சேகரித்து சாய் விண்டேஜ் கலெக்ஷனில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார் இதன் உரிமையாளர் சாய்சந்திர மோகன்.

பீளமேடு பாரதி காலனி பகுதியில் புதிதாக அமைந்துள்ள இந்த விற்பனையகத்தில், கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், மரம் மற்றும் சிற்பத்திலான பொருட்கள், கலை மற்றும் ஓவியப் பொருட்கள் கிடைக்கின்றன.

அனைவருக்கும் பிடித்தமான வகையில், ஒரு வீட்டு சூழலில் இவ்விடம் அமைந்துள்ளது இன்னும் இந்த அழகிய பொருட்களுக்கு முழுமையை சேர்க்கிறது. சிறிய சிறிய பொருட்களில் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் வரை இங்கு கிடைக்கும்.

விஸ்காம் படித்துள்ள சாய்சந்திர மோகன் அடிப்படையில் நடிப்பு மற்றும் ஃபேஷன் துறையில் ஆர்வம் கொண்டவர். சிறுவயதில் சிலைகள் சேகரிப்பதில் இருந்த ஆர்வம், பழமையான பொருளின் மீதும் கவனத்தை ஈர்க்க செய்துள்ளதாக கூறுகிறார்.

கொரோனாவால் ஏற்பட்ட பொது முடக்கத்தினால் அனைவருக்கும் ஒரு ஓய்வும், இடைவெளியும் கிடைத்திருக்கும். அதுபோல தனக்கு கிடைத்த நேரத்தில் ஆன்மிகம் மற்றும் பழங்காலப் பொருட்களின் மீது அதிக ஈடுபாடு வந்ததாக இவர் தெரிவிக்கிறார்.

“ஆன்மிகப் பாதையில் என் ஆர்வம் செல்லும்போதே முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த பழமையான பொருள்களின் மீதும் எனது ஆர்வம் அதிகரித்தது. பழமையானது என்று சொன்னாலே அது நம் பாரம்பரியத்துடன் இணைந்தது தான்” என்கிறார். இதுகுறித்து அவர் கூறிய சுவாரசிய தகவல்களை காணலாம்.

சிறுவயதில் இருந்தே எனக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு இருந்தது. விஸ்காம் படித்து முடித்த பின் சினிமா, மாடலிங் என அதிலேயே அதிகம் இணைத்திருந்ததினால் ஆன்மிகத்தில் எனது ஈடுபாடு குறைந்தது. ஆனால் ஊரடங்கு அனைவருக்கும் தங்களது துறையில் இருந்து சற்று ஒரு இடைவெளியை ஏற்படுத்தி இருக்கும்.

அந்த இடைவெளியில் என்னைச் சுற்றி நிகழ்ந்த சூழ்நிலைகளால் ஆன்மிகத்தின் மீதான ஈடுபாடு அதிகரித்தது.

பொதுவாக பழமையான பொருட்களை வாங்குவதற்கு முன்பு, அதைப் பற்றிய அறிமுகத்தை இணையதளம் வாயிலாக தெரிந்துக் கொள்கிறேன். இவை அல்லாமல் பயணத்தின் நடுவே வாங்கும் பொருட்களும் உண்டு. அதில் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்கள் தென்படும்.

நாங்கள் பார்த்த வரையில் பல வியாபாரிகளின் பொருட்கள் குறைத்து மதிப்பிடப்படுவதாக இருக்கும். இதுபோன்ற கடைகளை நாங்கள் தேடி செல்கிறோம். இக்கடைகளுக்கு செல்லும்போது மற்றவர்கள் பார்க்காத விசயங்களை நான் அதில் பார்ப்பது உண்டு. எனவே, இதை வெளியிலும் காட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.

தற்போது நாங்கள் வெளியில் இருந்தே பொருட்களை வாங்குகிறோம். எதிர்காலத்தில் மக்களின் தேவைக்கேற்ப அவர்களின் எதிர்பார்ப்புகளும் மாறும். எனவே அதற்கு ஏற்ற வகையில் பொருளை செய்து கொடுக்க வேண்டும் என்ற தேவை ஏற்படும். இதனை பூர்த்தி செய்ய இதுபோன்ற பொருட்களை செய்து தருபவர்களோடு தொடர்பு கொள்ள இப்பொழுது இருந்தே முயற்சி எடுத்து வருகிறோம்.

மேலும், மக்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியாத சில கடைகளில் பொருட்கள் அனைத்தும் பிரத்தியேகமாக இருக்கும். அவர்களை நாங்கள் தொடர்பு கொண்டு அணுகுகிறோம்.

பாரம்பரியமானது என்றாலே அது நம்மை ஈர்க்கக்கூடிய ஒன்றுதான். என்னதான் நவீன உலகிற்கு சென்றாலும், பாரம்பரியத்தையும் தேடுகிறோம். அல்லது பாரம்பரியத்திலேயே இருந்தாலும், புதிய விசயங்களையும் தேடுகிறோம். இப்பொழுது கட்டும் நவீன வீடுகளில் உட்கட்டமைப்பை பாரம்பரிய முறைப்படி அமைத்தால் அது பார்ப்பதற்கே அழகாக காட்சி அளிக்கும்.

இளைஞர்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனரா? என்ற கேள்விக்கு: ‘ஆன்மிகத்தில் தாங்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என வெளிப்படையாக பலர் காட்டிக் கொள்ள மாட்டார்கள். நவீன கலாச்சார முறை, சமூக மாற்றம் போன்ற காரணங்களினால் அவர்கள் இதை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் சிலர் ஆன்மிக ஈடுபாடு உள்ளதை வெளிக்காட்டுவதில் எந்த தயக்கமும் கொள்வதில்லை’ எனக் கூறுகிறார்.

நாங்கள் சேகரித்து வைத்துள்ள பொருட்களை எல்லாம் வாங்க நீண்ட நாட்கள் ஆகியிருந்தாலும், இதை ஒரு வார இறுதி நாட்களின் பயணமாகவே பார்த்தோம். பழங்காலப் பொருட்கள் எந்த இடத்தில் கிடைக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியாது. செல்லும் வழியில் இவை எங்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம். எங்களது பயண அனுபவத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.

மிகவும் ஈடுபாட்டுடன் செய்ததால், இந்தப் பயணங்கள் சிரமமாக இருந்ததில்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான் பொருட்களை வாங்க வேண்டும் என நாங்கள் முடிவெடுக்கவில்லை. செல்லும் வழியில் தென்படும் பொருட்களை சேகரித்தோம். இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இங்கு அமைந்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேகரிக்க ஆரம்பித்தோம். மார்ச் மாதத்தில் தேவையான பொருட்களை சேகரித்து முடித்து விட்டோம். பல மாநிலங்களுக்கு இதற்காக பயணம் மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் நிறைய விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. பழமையான பொருட்களை சேகரிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விசயம் என்பதால், இதற்காக நான் செல்லும் பயணங்கள் ஒரு சுமையாக தெரியவில்லை.

ஒரு சமயம் தஞ்சாவூர் சென்றிந்த போது ஒரு மிகச் சிறிய கடைக்கு போனோம். அங்கிருந்த பொருட்கள் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருந்தது என ஆச்சரியத்துடன் கூறினார் சாய்சந்திர மோகன்.