திமுக சந்தோஷப்படவேண்டாம் – சி.வி. சண்முகம் பதிலடி

அதிமுக பொதுக்குழுவில் விமர்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது பற்றி முதல்வர் ஸ்டாலின் விமர்சித்த நிலையில், “அதிமுகவில் நடப்பதை கண்டு திமுக சந்தோஷப்பட வேண்டாம். திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது என, நாங்களும் பார்ப்போம்” என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, “இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியும். அந்த பிரச்னைக்கு நாம் செல்ல வேண்டாம். தலையிட வேண்டிய அவசியமில்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்” என்று மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து, “ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் என்று பதவிகள் அதிமுகவில் தற்போது இல்லை . ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம். அதை ஏற்றுக் கொள்வோம்.

ஜூலை 11ல் பொதுக்குழு கூடும் என்று அவைத்தலைவர் அறிவித்ததில் என்ன தவறு உள்ளது? பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக 40 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். தோற்றவர்கள், விரக்தியின் விளிம்பில் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள்.

அதிமுகவில் நடப்பதை கண்டு திமுக சந்தோஷபடவேண்டாம். திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது . உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் செய்யும் போது திமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கத்தான் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.