நேரு கல்லூரியில் விமானவியல் கண்காட்சி துவக்கம்

பாலக்காடு சாலை குனியமுத்தூரில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியில் 14 வது ஏரோபிளஸ் 2022 விமான கண்காட்சி வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த கண்காட்சி வரும் 26 ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதல் நாள் கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கும், ஜுன் 25 மற்றும் 26 ம் தேதி பொதுமக்களுக்கும் காலை அனுமதியளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

கண்காட்சியை சூலூர், ஏர் போர்ஸ் ஸ்டேஷன், 5 பிஆர்டி, ஏர் ஆபீசர் கமாண்டிங், ஏர் கமாண்டர் கேஎஎ. சன்ஜீப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பேசியதாவது: ஏவியேஷன் துறை படிப்புகள், நேரடி தொழில்நுட்ப பயிற்சிக்கான வாய்ப்பை நேரு ஏரோநாட்டிக்ஸ் கல்லூரி வழங்குவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஆர்மி ஏவியேஷன், நேவல் ஏவியேஷன் துறைகளிலும் மாணவர்கள் பணி வாய்ப்பைப் பெற இயலும்.

ஏர்கிராஃப்ட் இன்ஜினிரீங் துறையில் மாணவர்களும், இளைஞர்களும் சாதனைகள் புரிய நிறைய வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் ஏர்ஃபோர்ஸ்சில் சேர்ந்து, தேச சேவையும் புரியலாம். இது போன்ற அரிய கண்காட்சியால், சிறப்புக் கருத்தரங்கத்தால் மாணவர்கள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்து பேசும் போது:  விமானவியல் துறையில் ஆண்டு தோறும் உருவாகும் 25 சதவீதம் முன்னேற்றத்தை, புதிய திட்டங்களை மாணவ மாணவியர்களும் பொது மக்களும் தெரிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

மேலும் இந்த துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் பறக்கும் நிலையில் இயங்கக்கூடிய 5 விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் பார்வைக்காக அணிவகுத்து உள்ளன. விமான ஆய்வுக் கூடங்கள், மற்றும் விமானம் சம்பந்தப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்று பேசினார்.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவர்களை ஏரோபிளஸ் 2022 கண்காட்சி அமைப்பாளர் ரமேஷ் பாபு வரவேற்றார். நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் இதில் கலந்து கொண்டார்.