டெல்லியில் காற்று மாசை குறைக்க கனரக வாகனங்களுக்குத் தடை!

தலைநகர் டெல்லியில் வாகனத்தினால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியாக அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் நுழைவதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லிக்குள் தினசரி சுமார் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை சரக்கு வாகனங்கள் நுழைவதாக கூறப்படுகிறது. குளிர் காலத்தில் டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் முடிந்த போகத்தின் விவசாய குப்பைகள் எரிக்கப்படுவது வழக்கம். இதனால் காற்றில் ஏற்படும் மாசு, காற்றின் சுழற்சியில் டெல்லி வரை பரவுகிறது.

அங்கு ஏற்கனவே அதிகரித்து இருக்கும் வாகனப் பயன்பாட்டால் உண்டாகும் புகையோடு, இந்த புகையும் குளிர்கால பனியோடு இணைந்து மாசு கலந்த அடர் பனியாக மாறுகிறது.

இந்த பணியினால் மக்களுக்கு சுவாச பிரச்சனைகள் வருவதோடு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும், அங்கு நிலவும் இந்த அடர் பனி காரணமாக பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுமுறையும் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு நடவடிக்கையாக, குளிர்காலத்தில் ஏற்படும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசைக் குறைக்க அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் தலைநகருக்குள் நுழைவது தடை செய்யப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

டெல்லி அரசு, நகரத்தில் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உதவும் வகையில், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், அக்டோபர் 1 ஆம் தேதி BS VI-இணக்க பேருந்துகளை மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.