“அரசுப் பள்ளிகளிலேயே மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்”

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி என்ற மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்

ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, மழலையர் பள்ளி வகுப்புகள் சமூக நலத்துறைக்கு மாற்றப்படவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகப்படியாக நடைபெற்றதால், ஏற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்ய, அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளுக்கு பாடம் எடுத்த அசிரியர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் இயங்கி வந்த மழலையர் வகுப்புகள் அங்கன்வாடி மையத்துக்கு மாற்றப்படும் என அறிவித்தது.

இந்த நிலையில், மழலையர் வகுப்புகள் தொடர்ந்து அரசுப் பள்ளிகளிலேயே செயல்படும் என்றும், மழலையர் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் வகையில், தகுதியான சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.