பஞ்சு வரத்து குறைவு விலை உயர்வு

ராமநாதபுரத்தில் பருத்தி விளைச்சல் குறைவாக இருப்பதால், சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்ற பருத்தி பஞ்சு, தற்போது ஒரு கிலோ ரூ.104 ஆக உயர்ந்துள்ளது. நல்ல விலை கிடைத்தும் மகசூல் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி நடக்கிறது. சத்திரக்குடி, பரமக்குடி, உத்தரகோசமங்கை, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் ஆகிய பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்கின்றனர். இந்தாண்டு மழை காரணமாக  பருத்தி நன்றாக விளைந்தது. கடந்த மார்ச் மாதம் வரத்தும் அதிகரித்து, பஞ்சு விலை தரத்திற்கு ஏற்ப அதிக விலை போனது.

தற்போது பருத்தி விளைச்சல் இன்றி, சந்தைக்கு வரத்து குறைந்ததால் சந்தையில் பருத்தி பஞ்சு விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.104 வரை விலை அதிகரித்தது. இனிவரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இங்கு எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லாததால், பருத்தி விளைச்சல்  பாதிக்கப்பட்டுள்ளது.  நல்ல விலை கிடைத்தும் மகசூல் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தில் விற்கப்படும் பஞ்சு மொத்த வியாபாரிகள் மூலம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது பருத்தி சீசன் முடியும் தருவாயில் பஞ்சு வரத்து குறைந்து, விலை கூடியுள்ளது.