ஆபத்தான மூளை பிரச்சனைக்கு அதிநவீன சிகிச்சை தந்து காத்த குப்புசாமி மருத்துவமனை

மூளையில் ரத்த நாள வீக்கத்தால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் கண் இமை சோர்வு மற்றும் இடது கண்விழியினை அசைக்க இயலாமை உள்ளிட்ட பிரச்சினைகளுடன் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் இவருக்கு இடது கண்ணில் இரட்டைப் பார்வை கோளாறும் இருந்தது.

மருத்துவ பரிசோதனையில் இவருக்கு மூளையின் இடது பக்கத்தில் உள்ள இரத்த நாளத்தில் வீக்கம் (Aneurysm) இருப்பது கண்டறியப்பட்டது. அனீரிசம் என்பது இரத்த நாளத்தில் பலூன் போன்று ஏற்படுகிற வீக்கம் ஆகும்.

இதனால் இரத்த நாளத்தில் முறிவு ஏற்பட்டால் மூளையின் உட்சவ்வு பகுதியில் இரத்தம் வெளியேறும் (Subarachnoid Hemorrhage) அபாயம் நிகழவும் வாய்ப்பு உண்டு, தாங்க இயலாத அதிதீவிர தலைவலி முதல் சுயநினைவு இழப்பு மற்றும் மரணம் ஏற்படுதல் வரையில் இதன் விளைவுகள் மாறுபடும்.

கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் நியூரோ இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட் மருத்துவர் ராஷ்மிரஞ்சன் பதி தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த பெண்மணிக்கு ஃபுளோ டைவர்ட்டர் ஸ்டென்ட் (Flow Diverter Stent) மூலமாக அதிநவீன முறையில் சிகிச்சை அளித்தனர்.

மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் தொடைப்பகுதியில் சிறிய அளவில் துளையிட்டு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த 2 நாட்களிலேயே இரட்டை பார்வை கோளாறில் முன்னேற்றம் ஏற்பட்டு இந்த பெண்மணி வீடு திரும்பினார். இவரது மண்டை நரம்பு வாத நோய் (Cranial Nerve Palsy) சில மாதங்களில் முழுவதும் குணமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.