டாக்டர். ஆர்.வி. கலை கல்லூரியில் தடுப்பூசி முகாம்

டாக்டர். ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறை மற்றும் காரமடை சௌமியா மருத்துவமனையின் சார்பில் கோவிட் – 19 நோய் தொற்றுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கான கூட்டத்தில் உயிர் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் சாரா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.

காரமடை, சௌமியா மருத்துவமனையின் டாக்டர் சௌமியா வதனா மற்றும் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் சதீஷ்குமார் சுகுமாரன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, “மனித வாழ்க்கையில் தடுப்பூசியின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

அவர்கள் பேசுகையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால், நோய் தொற்று ஏற்பட்டாலும் நோயின் தீவிரம் குறைவதற்கான சாத்தியம் உள்ளது. தடுப்பூசி போடுவதன் மூலம் உடலில் நோய் அணுகாமல் வரும்முன் பாதுகாத்துக் கொள்ளலாம். நம் முந்தைய தலைமுறையினர் 120 ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினர் 40 வயதிலேயே இறக்க நேரிடுகிறது. இதற்கு காரணம் ஆரோக்கியமாக உடலை பாதுகாக்காமல் இருப்பதுதான்.

ஆரோக்கியமாக வாழ சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். யோகா, உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம். நம் ஆயுளும் நீடிக்கும். இதற்குச் சான்று பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் அவர்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

கோவிட்-19 க்கான தடுப்பூசி மருந்தை உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்ந்தவர்கள் தான் கண்டு பிடித்தனர். அதுபோலவே இன்றைய மாணவர்களும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து துறை சார்ந்த அறிவை பெற வேண்டும் என்று பல்வேறு கருத்துக்களை மாணவர்களுக்கு கூறினர்.

இந்நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது.