எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் உயிர்கள் எங்களின் உயிர்கள் 2022!

“நம் மகிழ்ச்சி நம் கையில்!”

‘மனிதன் சராசரியாக நாள் ஒன்றிற்கு ஆறாயிரம் சிந்தனைகளை சிந்திக்கிறான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.’

‘நாம் மகிழ்ச்சியான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை சிந்திக்கின்றோமா அல்லது துயர் தரும் துக்கமான வலி தரக்கூடிய சிந்தனைகளை சிந்திக்கிறோமா என்பது நம் கையிலேதான் இருக்கிறது. எனவே மகிழ்ச்சியான சிந்தனைகளை எப்போதும் சிந்தித்து இருப்போம். மகிழ்ச்சி என்பது எதிர்காலத்தில் மட்டும் இல்லை நிகழ்காலத்திலும் இருக்கிறது, எனவே நிகழும் இந்த காலத்திலேயே நாம் மகிழ்ந்து இருப்போம்’ என்று கூடியிருந்த பல நூற்றுக்கணக்கான எஸ்.என்.எஸ். நிறுவன குடும்ப உறுப்பினர்களை எஸ். என்.எஸ். பொறியியல் கல்லூரியின் முதல்வர் சார்லஸ் கேட்டுக்கொண்டார்.

எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் குடும்ப நிகழ்வான ‘உயிர்கள் எங்களின் உயிர்கள்’ நிகழ்வில் இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் எஸ்.என்.எஸ் குழுமத்தின் நிர்வாக உறுப்பினர்கள், குழுமத்தின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களின் முதல்வர்கள், டீன்கள், இயக்குனர்கள், ஆசிரியர்கள், பேராசியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் இதர ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுக்கு ஈடான வகையில் மிக விமர்சையாக அமைக்கப்பட்டிருந்தது. விஜய் டிவி புகழ் விஷால் மற்றும் ஜாக்ளின் தொகுத்து வழங்க பாடகர்கள் நிவாஸ், ஹரிப்ரியா மேலும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் செந்தூர் பாண்டியன் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் அனைத்து கட்ட பணியாளர்களும் இவ்வாறு நிகழ்வில் ஒன்றுசேர்ந்து கொண்டாடுவது வழக்கம் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் எஸ்.என்.எஸ் குழுமத்தின் பணியாளர்கள் அனைவரும் தரமான கல்வியை வழங்க உழைத்து வருகின்றனர். உங்கள் அனைவரின் ஆசியும், உழைப்பும், ஒத்துழைப்பும் வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து எங்களுக்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தாண்டு எஸ்.என்.எஸ் குழுமத்தின் டெக்னிகல் டைரக்டர் நலின் விமல் குமாரின் பிறந்தநாளன்று இந்நிகழ்வு நடைப்பெற்றதால், டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அனிதா, “வாழும் நாட்கள் வளமாக இருக்க வேண்டும்” என்று வாழ்த்து கவிதை ஒன்றை வாசித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய நலின் விமல் குமார், “கடந்த 10 ஆண்டுகளில் என்னுடைய பயணத்தில் பல சவால்கள் இருந்தது. என்னுடைய குடும்பம் என்ற உரிமையில் என்னுடைய பெற்றோர் மட்டுமல்லாது என்னுடன் பணி செய்யும் அனைவரையும் அதிக பளுவை என்னோடு சேர்ந்து தூக்க வைத்தேன்.”

“இதில் நான் கற்றுக் கொண்டது, பயணத்தில் சில இடங்களில் தோல்விகள் இருந்தும், அந்த ஒவ்வொரு தருணத்திலும் பேராசியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருமே நல்ல ஆசான்களாக இருந்து வழிகாட்டியுள்ளார்கள். உங்களுடன் இந்நாளை கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி. ‘உயிர்கள் எங்கள் உறவுகள்’ என்று இந்த சந்திப்பை அழைப்பதே பொருத்தமாக இருக்கும்,” என்றார்.

மேலும் அவர் கொரோனாவால் பொது நிகழ்வுகள் எதும் நடைபெறாமல் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகள் இந்த எஸ்.என்.எஸ் குடும்ப விழா நடைபெறாமல் இருந்தது, இதன் பின் ஒவ்வொரு ஆண்டும் எஸ்.என்.எஸ் குழும தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் பிறந்தநாளன்று நடைபெறும் என்று தெரிவித்தார்.

நிகழ்வில் எஸ்.என்.எஸ் கல்லூரியின் மாணவ மாணவிகள் மற்றும் சிறப்பு குழுவினர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இயக்குனர் நலின் மற்றும் முதல்வர் செந்தூர் பாண்டியன் இருவருக்கும் பிறந்தநாள் என்பதால் குழந்தைகளோடு கேக் வெட்டி நிகழ்வு நிறைவு பெற்றது.

Photos: Sathis Babu

News: David Karunakaran