இந்துஸ்தான் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

தேவையற்ற தவறு வாழ்வை தடம் புரள செய்யும் – உமா ஐ.பி.எஸ்

மாணவர்கள் செய்யக் கூடிய தேவையற்ற சில தவறுகளால் அவர்களுடைய வாழ்க்கைப்பாதை தடம் புரண்டு போவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது என கோவை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு இணை ஆணையர் உமா ஐ.பி.எஸ், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

கல்லூரியின், உடற்கல்வி துறை மற்றும் வணிகவியல், கணினி பயன்பாட்டுத்துறை சார்பாக “மாணவர்களின் நல்வாழ்வு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் கோவை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு இணை ஆணையர் உமா ஐ.பி.எஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களுடைய வாழ்வில் வெற்றி பெற லட்சியம் என்னும் இலக்கிணை நோக்கி கல்லூரி படிப்பினை மேற்கொள்ள வேண்டும். பள்ளிப் படிப்பைக் காட்டிலும் கல்லூரி படிப்பினை மேற்கொள்ளும் போது மிக கவனமாக மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த வயது மாணவர்கள் செய்யக் கூடிய தேவையற்ற சில தவறுகளால் அவர்களுடைய வாழ்க்கைப்பாதை தடம் புரண்டு போவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது.

குறிப்பாக செல்போன், தவறான நண்பர்கள் தேவையற்ற போதைப்பழக்கங்கள் போன்றவற்றறை மிக முக்கியமாக தவிர்க்க வேண்டும். தனது குடும்ப சூழ்நிலையை நினைத்து படிப்பில் கவனம் செலுத்தி வந்தால் நீங்கள் வெற்றி என்னும் சிகரத்தை அடைய முடியும் என்று கூறினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஷ்பிரபு, கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, பீளமேடு காவல் ஆய்வாளர் விக்னேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.