என்ன ஆகும் வன்னியர் இடஒதுக்கீடு?

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வடதமிழகத்தில் அடர்த்தியாக வாழும் வன்னியர் சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை 1950 களில் இருந்தே ஒலிக்கத் தொடங்கினாலும், வன்னியர் சங்கத்தை நிறுவி 1980 களில் இடஒதுக்கீடு போராட்டத்தை மருத்துவர் ராமதாஸ் தீவிரப்படுத்திய பின்னர் தான் இந்த விவகாரம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

எம்.ஜி.ஆர் காலத்தில் போராட்டம் அடக்கப்பட்டு, ராமதாஸ் ஓய்ந்து இருந்த காலகட்டத்தில் 1989 இல் ஆட்சிக்கு வந்த மு.கருணாநிதி, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக 50 சதவீதம் கொண்ட பிற்பட்டோர் தொகுப்பில் இருந்து 20 சதவீதத்தை தனியாக பிரித்து வன்னியர்கள், இசை வேளாளர், பரதர்கள் (மீனவர்), பர்வதராஜ குல மீனவர், வண்ணார், நாவிதர், குயவர், ஒட்டர், போயர், குரும்பக்கவுண்டர், சீர்மரபினர்களான கள்ளர், பிரமலை கள்ளர், கொண்டையங்கோட்டை மறவர், செம்பரத்து மறவர், வலையர்கள், அம்பலக்காரர், வேட்டுவ கவுண்டர், தொட்டிய நாயக்கர், ஊராளி கவுண்டர் உள்பட 108 சாதிகளை மிகவும் பிற்பட்டோர் தொகுப்பை (எம்.பி.சி.) உருவாக்கினார்.

அப்போது பேரவையில் பேசிய கருணாநிதி, 50 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் 3 முதல் 4 சதவீத இடங்களை பெற்று வரும் வன்னியர்களுக்கு இனிமேல் 6 முதல் 7 சதவீத வாய்ப்பு கிடைக்கும் என்றார். ஆனாலும், திருப்தி அடையாத ராமதாஸ், முழு மாங்கனி கேட்ட எங்களுக்கு அழுகிய மாங்கனியை கொடுத்துவிட்டார் கருணாநிதி என விமர்சனம் செய்தார்.

ராமதாஸ் கோரிக்கை: தொடர்ந்து வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு கோரிக்கையை அடுத்தடுத்து வந்த அதிமுக, திமுக அரசுகளிடம் வைத்துக்கொண்டே இருந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பரில் இதே கோரிக்கையை வைத்து மீண்டும் போராட்ட அஸ்திரத்தை எடுத்தார் ராமதாஸ்.

தேர்தல் நேரத்தில் எழுந்த இக்கோரிக்கையை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்புக்காக நீதிபதி குலசேகரன் குழுவை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். இக்குழுவின் அறிக்கை வர 6 மாத காலம் ஆகும் நிலையில், தேர்தலுக்கு முன்பாக வன்னியர்களுக்கு 12 சதவீத உள்ஒதுக்கீடாவது வழங்க வேண்டும் என்று தனது நிபந்தனையை தளர்த்தினார்.

ராமதாஸின் கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் ஏற்றுக்கொண்டு வன்னியர்களுக்கு மட்டுமன்றி பிற எம்.பி.சி. பிரிவினரும் பயனடையும் வகையில் எம்.பி.சி. தொகுப்பை மூன்றாக பிரித்து அதற்கான மசோதாவை பேரவையில் நிறைவேற்றினார்.

அதன்படி, வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர், படையாச்சி, பள்ளி, அக்னிகுல சத்திரியர் என 7 உள்பிரிவுகளை அடக்கிய வன்னியர்குல சத்திரியர் சமூகத்துக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் ஒரு தொகுப்பும், அம்பலக்காரர், பிரமலை கள்ளர், மறவர், சேர்வை, செம்பநாட்டு மறவர், ஊராளி கவுண்டர், வலையர், வேட்டுவ கவுண்டர், மீனவர் உள்பட 68 சீர்மரபினர் மற்றும் தொட்டிய நாயக்கர், வண்ணார், ஒட்டர், வலையர், போயர் உள்பட 25 எம்.பி.சி. பிரிவினர் ஆகியோருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதை தவிர மேலும் 22 எம்.பி.சி. பிரிவினரை தனியாக பிரித்து 2.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது சாதிவாரியான கணக்கெடுப்பு வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரில் கடைசி நாளில் இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் அனுமதியும் அப்போது பெறப்பட்டது.

எம்.பி.சி. தொகுப்பு பிரிக்கப்பட்ட விவகாரம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனிப்பட்ட முறையில் வெற்றி என்ற வகையிலும், ராமதாசுக்கு ஓரளவு என்ற வகையில் அமைந்தது. எடப்பாடி தொகுதியில் மக்களவைத் தேர்தலின்போது அதிமுக 8,000 வாக்குகள் திமுகவைவிட பின்தங்கியிருந்த நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு காரணமாக எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால், வடதமிழகம் முழுவதும் இது அதிமுகவுக்கு எதிராக வன்னியர் தவிர்த்த பிற சாதியினரை திருப்பிவிட்டது.

எம்பிசி தொகுப்பை மூன்றாக பிரித்தது தமிழக அரசியல் வரலாற்றில் சமூகநீதிக்கான மற்றொரு மைல் கல் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், 7 சதவீத தொகுப்புக்குள் இருக்கும் சீர்மரபினர்களையும், அரசியல் ரீதியாக குரல் கொடுக்க ஆதரவு இல்லாத வலையர், வண்ணார், ஒட்டர், போயர், தொட்டிய நாயக்கர், மீனவர் போன்றவர்களையும் இந்த 7 சதவீத தொகுப்புக்குள் அடக்கியதால் அவர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இடஒதுக்கீடு முறையால் பாதிக்கப்பட்ட பிரமலை கள்ளர், மறவர் சமூகத்தினர் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்து இந்த இடஒதுக்கீட்டுக்கு தடை பெற்றனர். இதை எதிர்த்து தமிழக அரசு, பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒரு சமூகத்துக்காக இடஒதுக்கீடு வழங்கியது தவறு என்றும், இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பு செல்லும் என உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி காலத்தில் வன்னியர் இடஒதுக்கீடு எப்படி சாத்தியமானது என்பதை ஆய்வு செய்து பார்த்தால் இந்த இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் தடை செய்ததில் இருக்கும் உண்மையான காரண காரியங்கள் வெளியாகும். பொதுவாக இடஒதுக்கீடு என்பது சமூக நீதி அடிப்படையாக கொண்டுவரப்படுகிறது என வெளிப்படையாக சொல்லப்பட்டாலும், அதன் உள்ளே புகுந்து ஆய்வு செய்தால் அரசியல் ரீதியான காரணங்கள் இருப்பதை தெரிந்துகொள்ளலாம்.

எடப்பாடி பழனிசாமி அரசு காலத்தில் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு விவகாரத்தை ஆய்வு செய்தால் பல்வேறு சமூகங்களுக்கான சமூக நீதியை குழிதோண்டி புதைத்துவிட்டு முழுக்க முழுக்க வன்னியர் வாக்குகளை குறிவைத்து இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என்பதை முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

2019 மக்களவைத் தேர்தலின்போது 50 சதவீதத்துக்கும் மேல் வன்னியர்கள் வாழும் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக 8,300 வாக்குகள் பின்னடைவை சந்தித்திருந்த நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு கொண்டுவந்த பிறகு 2021 பேரவைத் தேர்தலில் 93,000 வாக்குகளில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.

அதேபோல, கொங்கு வேளாளர்கள், வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் சேலம் மாவட்டத்தில் 11 பேரவைத் தொகுதிகளில் 10 இடங்களிலும், தருமபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற வன்னியர் இடஒதுக்கீடு தான் கைகொடுத்தது என்பதை பார்க்கும்போதும், வடதமிழகத்தில் வன்னியர்களின் வாக்குகளில் 90 சதவீதத்துக்கு மேல் அதிமுக கூட்டணி பெற்றிருப்பதை பார்க்கும்போதும், வன்னியர் இடஒதுக்கீடு மசோதாவை எடப்பாடி பழனிசாமி அரசு கடைசி நேரத்தில் அவசர அவசரமாக எதற்காக கொண்டுவந்தது என்பது தெள்ளத்தெளிவாக புரியும்.

தனி ஒதுக்கீடு கோரி ராமதாஸ் போராட்டம் நடத்தி வந்த காலத்தில், 2020 டிசம்பர் மாதத்தில் கூட சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையத்தை அமைத்தார் எடப்பாடி பழனிசாமி. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னர்தான் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய முடியும் என்ற உறுதியான முடிவில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், உள்கட்சியில் அரசியல் எதிரியான சசிகலா சிறையில் இருந்து வெளிவந்ததும் ஜனவரிக்கு பின் தனது நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி மாற்றிக்கொள்ளும் நிலை உருவாது.

உள்கட்சி எதிரியான சசிகலாவை சமாளிக்கவும், வடதமிழகத்தில் இருக்கும் தனது ஆதரவாளர்களான சி.வி.சண்முகம், சம்பத், வீரமணி போன்ற வன்னியர் சமூகத்தை சேர்ந்த அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களை திருப்திப்படுத்தவும் தனது அரசின் பதவிகாலம் முடியும் கடைசிநாளில் வன்னியர் இடஒதுக்கீட்டை அவசர அவசரமாக நிறைவேற்றினார் எடப்பாடி பழனிசாமி.

அதேபோல, உள்ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டு ராமதாஸ், தனக்கு மட்டுமே அரசியல் லாபத்தை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக கூட்டணிக்குள் 23 தொகுதிகளை மட்டுமே பாமகவுக்கு ஒதுக்கி ராஜதந்திர முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்தார். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு சமூகநீதி பார்வையின்றி தேர்தல் வாக்கு வங்கியை மையமாக வைத்து முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே எடுக்கப்பட்டது.

இதனால், 20 சதவீத எம்.பி.சி. தொகுப்பு 10.5 சதவீதமாக பிரித்து வன்னியர்களுக்கும், 2.5 சதவீதமாக பிரித்து இசை வேளாளர்கள், கோவை செட்டியார் உள்ளிட்ட சமூகங்களுக்கும், மீதமுள்ள 7 சதவீதத்தில் வண்ணார், வலையர், போயர், வேட்டுவக்கவுண்டர், பருவதராஜகுலம் (மீனவர்கள்), ஒட்டவர், ஊராலி கவுண்டர், பிரமலை கள்ளர், மறவர் உள்ளிட்ட சமூகங்களுக்கும் ஒதுக்கப்பட்டது. இந்த 7 சதவீதத்தை பிரிக்காததால் வண்ணார், போயர், ஒட்டர், வேட்டுவக்கவுண்டர், தொட்டியநாயக்கர், ஊராளி கவுண்டர் உள்ளிட்ட சமூங்களின் சமூக நீதி நசுக்கப்பட்டது.

இந்நிலையில்தான், பிரமலை கள்ளர்கள், மறவர்கள் ஆகிய சமூகங்களை சேர்ந்தவர்கள் இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளனர். இப்போது உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1989 இல் ஒரு சமூகத்துக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கினால் அது எதிர்காலத்தில் நீதிமன்றம் தடை செய்ய வாய்ப்பு உருவாகும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக பிசி தொகுப்பில் இருந்து எம்பிசி தொகுப்பை தனியாக உருவாக்கி வன்னியர்கள் உள்பட பிற சமூகங்களுக்கும் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கினார். கருணாநிதி வழங்கிய இடஒதுக்கீட்டால், வன்னியர்கள் 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற்று இப்போது 10 சதவீதத்துக்கும் மேல் வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

ஆனால், வன்னியர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்காமல் பிற சமூகங்களையும் எம்.பி.சி. தொகுப்பில் சேர்த்துவிட்டார் என்றும், கருணாநிதி வழங்கியது அழுகிய மாம்பழம் என குறைகூறிய ராமதாஸின் விமர்சனம் இப்போது தவறு என்பதும், கருணாநிதி வன்னியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீடு இப்போதும் எவ்வளவு சட்டப் பாதுகாப்புடன் கூடியது என்பதும் உச்ச நீதிமன்றத்தின் இப்போதைய தீர்ப்பை பார்க்கும்போது தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

மேலும், கருணாநிதி முதல்வராக இருந்தகாலத்தில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதும் இதுவரை நீதிமன்றங்களால் தடை ஏதும் பெறப்படவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி காலத்தில் அவசர அவசரமாக தரவுகள் இன்றி கொண்டுவரப்பட்ட வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இனிமேல் வன்னியர் இடஒதுக்கீட்டை முறையாக சட்ட ரீதியாக செல்லுபடியாக்கும் முடிவு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் தான் உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை செல்லுபடியாக்க வேண்டுமெனில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதத்தை கூடுதலாக உயர்த்தி அதில் மேலும் சில சமூகங்களையும் சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும்போது எம்.பி.சி. பட்டியலில் உள்ள பிற சமூகங்கள் பாதிக்கப்படாத வகையில் அதை செய்ய வேண்டும். இதுபோன்ற திருத்தங்கள் செய்யும்போது தனக்கு அரசியல் ரீதியாக பின்னடைவு இல்லாமல் இருந்தால் மட்டுமே முதல்வர் ஸ்டாலினும் இவ்விஷயத்தில் ஆர்வம் காட்டுவார். இல்லையெனில் இதுவும் கிணற்றில் போட்ட கல்லாக மாறிவிடும்.

கேரளத்தில் ஈழவர்களுக்கு தனிஒதுக்கீடு, நாடார்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எந்த அரசியல் கட்சிகளும் ஈழவர்கள், நாடார்களை மையமாக வைத்து அங்கு அரசியல் கட்சி நடத்தாததால் இதுபோன்ற இடஒதுக்கீடு செய்யும்போது அதன் லாபம் நேரடியாக கேரள முதல்வர் விஜயனுக்கு கிடைத்தது.

ஆனால், வன்னியர்களை மையமாக வைத்து பாமக அரசியல் செய்வதால் இந்த விஷயத்தை நன்கு ஆராய்ந்து, லாப, நஷ்ட கணக்குகளை பார்த்து தான் முதல்வர் ஸ்டாலின் அடுத்தகட்ட அரசியல் நகர்வை செய்ய முடியும். இவற்றையெல்லாம் கூட்டி, கழித்து பார்த்தால் சாதி வாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் தான் இதுபோன்ற சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.

குரல் கொடுப்பாரா இ.பி.எஸ்?

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, இந்தியா முழுவதும் தனி ஒதுக்கீடு விவகாரத்தைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றம் அதற்கு எதிராகவே உள்ளது. உதாரணமாக கேரளாவில் நாடார் இட ஒதுக்கீடு, மகாராஷ்டிரா ஹரியானாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, குஜராத்தில் பட்டிதார்களுக்கான இட ஒதுக்கீடுகளையும் உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை மதுரை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களும் தடை செய்துள்ளது. தற்போது இந்த இட ஒதுக்கீடு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு ஆதரவாக இந்த ஒதுக்கீட்டை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி குரல் கொடுப்பாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

அதே வேளையில் பிரிக்கப்பட்ட இந்த 20 சதவீதத்தில் எஞ்சியுள்ள 9.5 சதவீதம் சரியாக பிரிக்கப்படவில்லை எனும் கோஷம் எழுந்து வருகிறது. குறிப்பாக 7 சதவீதம் தொகுப்பில் உள்ள வலையர், வண்ணார், வேட்டுவ கவுண்டர், ஊராளி கவுண்டர், மீனவர் போன்ற சமூகங்களுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.