100 வது ஆண்டைத் தொடும் கே.ஜி குழுமம்

கே.ஜி. குழும நிறுவனங்களின் நூற்றாண்டு விழா மற்றும் கே.ஜி. மருத்துவமனை தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் வகையில் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துடன் கூடிய விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (03.04.2022) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்க உள்ளார்.

இதனையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் மற்றும் மருத்துவர் பத்மஸ்ரீ பக்தவத்சலம் பேசியதாவது:

கே.ஜி.மருத்துவமனை தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவு பெற்றதையும், என் தந்தை கே.கோவிந்தசாமி நாயுடு அவர்களால் நிறுவப்பட்ட கே.ஜி. குழுமங்களின் நூற்றாண்டு விழாவையும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட உள்ளோம் என கூறினார்.

மருத்துவமனை குறித்து கூறுகையில், இந்த மருத்துவமனையில் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவு, விபத்து பிரிவு, மகளிர் மருத்துவம் என பல பிரிவுகளில் உயிர் காக்கும் துறைகள் உள்ளன. 250 மருத்துவர்கள், 300 செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என சுமார் 1250 பேர் இங்கு பணியாற்றுகின்றனர் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

எங்கள் மருத்துவமனைக்காக உழைத்த உழைப்பாளிகளை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களின் சேவையை பாராட்டும் வகையிலும் 138 நபர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

கே.ஜி.மருத்துவமனையை சிறந்த முறையில் நடத்துவதற்கு உதவிய அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா நடைபெறவுள்ளது. இதில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு விருந்தினராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கௌரவ விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கலந்து கொள்கின்றனர்.

சுமார் ஒரு இலட்சம் பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும், 15,000 பேருக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சையும் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.