உலகியல் வாழ்க்கையை துறக்காமலே ஆன்மீகம் சாத்தியமா?

உலகியலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனிமனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்துகொள்ள வேண்டியதுதான். அது ஒவ்வொரு தனிமனிதருக்கும் உள்ள உரிமையும் கூட.

சத்குரு: மனித சக்தி என்பது, தனக்குள் இருக்கும் பேராற்றல். அதனை உணர்வதன் மூலம் ஒரு மனிதனால் தன்னையே உணர இயலும். தன்னை உணர வேண்டுமானால் உலகியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டாக வேண்டுமா என்று பலரும் கேட்கிறார்கள். உலகியல் வாழ்க்கை, லௌகீக வாழ்க்கை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

உங்கள் உணவை நீங்களே சமைக்கிறீர்கள். உங்கள் ஆடைகளை நீங்களே தூய்மை செய்கிறீர்கள். இவையெல்லாம் உலகியலின் அங்கங்கள்தான். இவற்றையெல்லாம் செய்யாமல் இங்கே வாழ இயலாது.

ஒவ்வொரு மனிதரும் உலகியலில், தான் எந்தவிதத்தில் ஈடுபட வேண்டுமென்பதை சுய விருப்பத்தின் பேரில் தானாகவே தீர்மானிக்கிறார். சிலர் அரசியலில் இருக்கிறார்கள். சிலர் அலுவலகங்களில் பணிபுரிகிறார்கள். சிலர் தொழிலகங்களை நடத்துகிறார்கள். சிலர் தரை பெருக்குகிறார்கள். இவர்கள் எல்லோருமே உலகியலில் இருப்பவர்கள்தான். எனவே உலகியலில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

உலகியலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனிமனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்துகொள்ள வேண்டியதுதான். அது ஒவ்வொரு தனிமனிதருக்கும் உள்ள உரிமையும் கூட.

இதில் சிலர் தானாகவே எதையும் செய்வதில்லை. பிறர் செய்வதையெல்லாம் பார்த்து அதுபோல் செய்ய முற்படுகிறார்கள். தான் என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவோ, விழிப்புணர்வோ அவர்களிடம் இல்லை.

இத்தகைய ஒரு சிலர்தான், ஆன்மீக வழியில் செல்பவர்களைப் பார்த்து “இவர்கள் பொறுப்புகளை உதறிவிட்டுப் போகிறார்கள், உலகிற்காக வாழாமல் தனக்காக வாழ்கிறார்கள்” என்று புகார் சொல்கிறார்கள்.

வீட்டிலும் அலுவலகத்திலும் மட்டுமே இயங்குபவர்கள் தனக்காக வாழ்பவர்கள். அவர்களுக்குத்தான் உலக நலனில் அக்கறை இல்லை. தனது சொந்த நலனுக்காக என்று வந்துவிட்டு அந்த வலையிலிருந்து விடுபட இயலாமல் தவிப்பவர்கள்தான் ஆன்மீகப் பாதையில் செல்பவர்களைப் பார்த்து, “வாழத் தெரியாதவர்கள், உலகத்தை விட்டு ஒதுங்கிவிட்டார்கள்” என்று சொல்லத் தொடங்குகிறார்கள்.

ஒரு குடிகாரன் இருந்தான். முழுபோதையில் தள்ளாடியபடியே ஒரு பேருந்துக்குள் ஏறியவன், எல்லோருடைய கால்களையும் மிதித்து பெட்டிகளைக் கலைத்து, தட்டுத் தடுமாறி, ஒரு கிழவியின் மீது விழுந்தான். கோபம் கொண்ட அந்தக் கிழவி, “நீ நரகத்திற்குப் போவாய்” என்று சபித்தாள்.

உடனே அந்தக் குடிகாரன், “அப்படியானால் நான் தவறான பேருந்தில் ஏறிவிட்டேன்” என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்க ஆரம்பித்தான்.

எந்தப் பேருந்து சரியானது, எது தவறானது என்பதெல்லாம் குடிகாரர்களுக்குத் தெரியாது. தங்கள் வாழ்வை விதவிதமான சிக்கல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டு, சூழ்நிலைக் கைதிகளாய் வாழ்பவர்கள், தங்கள் வாழ்வை திறம்பட நிர்வகித்து விரும்பும் திசையில் திட்டமிட்டு பயணம் செய்பவர்களைப் பார்த்து, “இவர்கள் தவறானவர்கள்” என்று பேசுகிறார்கள். இன்றைய உலகில் 0.1% பேர்தான் ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் இருப்பவர்கள். 50% பேர் இயந்திரங்கள் போல இடையறாமல் செயல்பட்டு, தங்கள் செயல்களாலேயே உலகுக்குக் கேடு விளைவிக்கிறார்கள்.

தங்கள் வாழ்வை விதவிதமான சிக்கல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டு, சூழ்நிலைக் கைதிகளாய் வாழ்பவர்கள், தங்கள் வாழ்வை திறம்பட நிர்வகித்து விரும்பும் திசையில் திட்டமிட்டு பயணம் செய்பவர்களைப் பார்த்து, “இவர்கள் தவறானவர்கள்” என்று பேசுகிறார்கள்.

மனித சுயநலத்தின் காரணமாய், பூமி வேண்டாத பாரங்களை சுமந்து கொண்டிருக்கிறது. 50% பேரையாவது ஆன்மீக நெறியில் ஈடுபடுத்தினால் இந்த உலகம் காப்பாற்றப்படும். தங்களை விடுவித்துக் கொண்டவர்கள் தங்களுக்கோ, சமூகத்திற்கோ, உலகிற்கோ சுற்றுச் சூழலுக்கோ கேடு விளைவிப்பதில்லை.

சிறிது கூட விழிப்புணர்வின்றி, தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், மற்றவர்கள் செய்வதையெல்லாம், தாங்களும் செய்ய முற்பட்டவர்கள் பூமி உருண்டைக்கு மிகுந்த சேதம் விளைவிக்கிறார்கள். இத்தகைய செயல்களிலிருந்து விடுபடுவதொன்றும் தவறானதல்ல. அதுவே, மனிதகுலத்திற்கு செய்கிற பெரும் உதவி. இந்த உலகம் எப்போதுமே அற்புதமானதாக இருந்து வந்திருக்கிறது.

தன்னலம் மிக்க சிலரின் அடாவடி செயல்கள், உலகுக்கு நன்மை செய்வதாய் நினைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் தீமைகள், இவைதான் உலகிற்கு எதிரானவற்றை ஏற்படுத்தி வருகின்றன.

மனிதகுலம் நாகரீகமடைந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் மனிதகுலம் வாழ்வதற்காக எத்தனையோ விலங்குகளை வேட்டையாடி, சிலசமயம் மனிதர்களையே வேட்டையாடிய பிறகும் மனிதகுலம் நன்மையடையவில்லை.

மனிதன், வெளிச்சூழலை சரிசெய்ய விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவிகொண்டு என்னென்னவோ செய்துவிட்டான். ஆனால் அவன் உள்தன்மையில் நாகரீகம் அடையவில்லை.

உள்நிலையில் கவனம் செலுத்தி உரிய மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மனிதன் உயர்நிலை அடைய இயலும். அத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வழியே யோகா, தியானம் ஆகியவை.