நடுவுல கொஞ்சம் காங்கிரஸை காணோம்!

நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமன்றி கடந்த 8 ஆண்டுகளாக நடந்த பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் பின்னடைவையே சந்தித்து வருகிறது.

குறிப்பாக 5 மாநில பேரவைத் தேர்தல்களில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பிருந்த பஞ்சாப்பில் விருப்பம் போல அரசியல் செய்ததால், முதல்வரை மாற்றியதால் ஆட்சியை தக்கவைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் இழந்துவிட்டது. அதேபோல, உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் ஆட்சிக்கு எதிராக அதிருப்தி இருந்தாலும் அதை அறுவடை செய்யும் அளவிலான உத்திகளை காங்கிரஸ் செயல்படுத்த தவறியது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை 1989ல் மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்டது. பின்னர் நடந்த ராமர் கோயில் விவகாரம் ஆகியவற்றில் இருந்தே காங்கிரஸின் வாக்கு வங்கி சரியத் தொடங்கிவிட்டது. குறிப்பாக காங்கிரஸின் வாக்கு வங்கியாக இருந்த பிராமணர்கள், இஸ்லாமியர்கள், தலித்கள் கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சியை கைவிடத் தொடங்கி விட்டனர்.

ராமர் கோயில் விவகாரத்தில் பிராமணர்கள் உள்ளிட்ட உயர் ஜாதி வாக்குகள் பாஜகவுக்கு ஆதரவாகவும், ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போட்டுவிட்டதாக அதிருப்தி அடைந்த இஸ்லாமியர்கள், காங்கிரசை கைவிட்டு, ஜனதாதள தலைவர்களை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். இருப்பினும் தேசிய அரசியலில் முதன்மை சக்தியாக காங்கிரஸ் இருந்தது. காரணம், 2014 வரை வாக்கு சதவீதத்தில் பார்க்கும்போது காங்கிரஸ் தான் முதன்மை கட்சியாக இருந்தது.

2014 மக்களவைத் தேர்தலுக்குப்பின் தேசிய அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனை உருவானது. காரணம், அந்த தேர்தலில் தான் காங்கிரஸ் வாக்கு வங்கி அடிப்படையில் 2 வது கட்சியாக மாறியது. பாஜக ஏற்கெனவே இருந்ததைவிட 12.5 சதவீதம் உயர்ந்தும், காங்கிரஸ் 9.2 சதவீதம் குறைந்தும் போனதால் இந்த திருப்புமுனை மாற்றம் உருவானது.

10 ஆண்டுகள் நிலையான ஆட்சிக் கொடுத்த மன்மோகன் சிங்கை காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாததால் காங்கிரஸ் மேலும் வலுகுறைந்தது. எதிர்முனையில் வளர்ச்சி, மாற்றம் ஆகியவற்றுக்கான தலைவராக மோடி போட்டியிட்டதால் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

பாஜக என்பது தலைமை மற்றும் நிர்வாகிகளை அடிப்படையாக கொண்ட கட்சி. காங்கிரஸ் என்பது தலைமையை மட்டுமே நம்பியிருக்கும் கட்சி. இதனால், 2014 க்கு பிறகு காங்கிரஸ் தொடர்ந்து 90 சதவீதம் தேர்தல்களில் பின்னடைவையே சந்தித்து வருகிறது. இந்நிலையில் 2018 இல் நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும் ஒரு சிறிய வளர்ச்சியை காங்கிரஸ் பெற்றது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் முதல்வர் வேட்பாளர்களை முன்னிறுத்தாமல் காங்கிரஸ் வெற்றிபெற்றது.

இந்நிலையில் 2019 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை. அதுவும் காங்கிரசுக்கு பின்னடைவாகவே இருந்தது. குறிப்பாக தமிழகத்தை தவிர்த்து பார்த்தால் காங்கிரசுக்கு இந்திய அளவில் வாக்கு வங்கியில் பெரிய முன்னேற்றம் இல்லை. அமேதி தொகுதியிலேயே ராகுல் காந்தி தோல்வி அடைந்த பிறகு தனது தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதன்பிறகு நடந்த ஹரியானா, மகாராஷ்டிரா பேரவைத் தேர்தல்களில் ராகுல் காந்தி ஆர்வம் காட்டவில்லை.

இதன் விளைவு ஹரியானாவில் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் இருந்தும் அதை நழுவவிட்டது. மகாராஷ்டிரத்தில் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்றியிருக்கலாம். அதன்பிறகு ஜார்கண்டில் சிபுசோரனின் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து அங்கு கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஆனால், பீகார் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

தனித்தும் வெற்றிபெற முடியாத காங்கிரஸ், கூட்டணி கட்சிகளின் வெற்றியையும் பாதிக்கும் கட்சியாக மாறிவிட்டதோ என்ற தோற்றம் பீகார் பேரவைத் தேர்தலுக்குப்பின் உருவானது. இதனால், தமிழகத்தில் கூட காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் குறைக்கப்பட்டன. 2021 இல் நடந்த பேரவைத் தேர்தல்களில் புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததுடன் கேரளம், அசாமிலும் கூட ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.

இப்போதைய 5 மாநில பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியையே தழுவியுள்ளது. உத்தரபிரதேசத்தில் 6.4 சதவீதத்தில் இருந்து 2.33 சதவீதமாக காங்கிரஸின் வாக்கு வங்கி சரிந்துள்ளது. அதேபோல, உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மீதான அதிருப்தியால் 4 சதவீத வாக்கு வங்கியை காங்கிரஸ் உயர்த்தினாலும், ஆட்சியை காங்கிரசால் பிடிக்க முடியவில்லை. அதேபோல, கோவாவில் ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்பு இருந்தும், மாநில பொறுப்பாளர் ப.சிதம்பரம், திரிணாமூல் காங்கிரசை சரிசெய்ய உரிய முயற்சியை செய்யாததால் காங்கிரஸ் இப்போது ஆட்சியை பிடிக்கமுடியாமல் போனது.

அதேபோல, மணிப்பூர் மாநிலத்தில் கடந்த முறை தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் இப்போது 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தேசிய அரசியலில் காங்கிரஸின் முக்கியத்துவம் குறைந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக முழுநேர கட்சித் தலைவர் இன்றி காங்கிரஸ் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான், 2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் எத்தகைய வியூகம் அமைக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ஒரு முனையில் வலுவான பிரதமர் வேட்பாளரான மோடியை காங்கிரஸ் சந்திக்க வேண்டும். அதற்கு வலுவான பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்தாக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் அறிவிக்கும் பிரதமர் வேட்பாளரை, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், பாஜக எதிர்ப்பு கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் வலுகுறைந்து காணப்படும் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளரை பிற கட்சிகள் ஏற்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இந்திரா காந்தி குடும்பத்தை தவிர வேறு யாரை தலைவராக நியமித்தாலும் தலைமை பிளவுண்டு போகும் நிலையே உள்ளது. ஆனால், அந்த குடும்பத்தில் முன்னிலையில் இருக்கும் ராகுல் காந்தியால் காங்கிரசை வெற்றிப்பாதைக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை. அதேபோல, காங்கிரஸில் இருக்கும் மூத்த தலைவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அவர்களை கட்சியில் இருந்து நீக்க சோனியா காந்தியை சம்மதிக்க வைக்கவும் முடியவில்லை என்ற விமர்சனம் ராகுல் காந்தி மீது எழுந்துள்ளது.

தேசிய அரசியலை பார்க்கும்போது 2014, 2019 என இரண்டு முறை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த மோடி தலைமையிலான பாஜக, இப்போதும் மிகவலுவாக உள்ளது. அதேபோல, மீண்டும் மோடியே பிரதமர் வேட்பாளராக களம் காணும்போது அவருக்கு நிகராக அல்லது எதிராக போட்டியிடும் அளவுக்கு ராகுல் காந்தியை முன்னிறுத்த முடியுமா என்பது பாஜகவை எதிர்க்கும் பிற கட்சிகளுக்கு ஐயமாகவே உள்ளது.

2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் எத்தகைய வியூகம் அமைக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ஒரு முனையில் வலுவான பிரதமர் வேட்பாளரான மோடியை காங்கிரஸ் சந்திக்க வேண்டும். அதற்கு வலுவான பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்தாக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரியங்கா காந்தியை காங்கிரஸின் தலைமையை ஏற்க வைக்கலாமா என்ற எண்ணமும் காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு பிரிவினரிடம் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் எதையும் சாதிக்க முடியாத பிரியங்காவால் தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதேவேளையில் வலுவான பிரதமர் வேட்பாளரான மோடிக்கு எதிராக பெண் தலைவரான பிரியங்கா காந்தியை முன்நிறுத்தும்போது, பெண் வாக்காளர்களை கவர்ந்து நாடு முழுவதும் காங்கிரசுக்கு புத்துணர்வை ஊட்ட முடியும் என்ற பார்வையும் உள்ளது.

அதேபோல, பிரணாப் முகர்ஜி, மூப்பனார், அகமது பட்டேல் என காங்கிரசுக்கு மிகவும் திறமையான வியூகம் வகுப்பாளர்கள் முன்பு இருந்தனர். ஆனால், இப்போது அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலரான (நிர்வாகம்) கே.சி.வேணுகோபாலால் அந்த அளவுக்கு வெற்றி வியூகத்தை வகுக்க முடியவில்லை. அதேவேளை காங்கிரஸில் இருக்கும் டி.கே.சிவக்குமார், பூபிந்தர்சிங் ஹூடா, பூபேஸ் பாகல் போன்ற நிர்வாகத் திறன் மிக்கத் தலைவர்களால் வெற்றி வியூகத்தை வகுக்க முடியும்.

இதில் பூபிந்தர்சிங் ஹூடா மற்றும் ராகுல் காந்தி இடையே சரியான புரிதல் இல்லாத நிலைதான் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸ் எப்படி மறுகட்டமைப்பு செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழகம், மகாராஷ்டிரம், ஜார்கண்ட் ஆகியவற்றில் மட்டுமே கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எண்ணிக்கை குறையும் நிலையில் உள்ளது. காங்கிரஸின் வெற்றி விகிதம் குறைவாகவே இருப்பதால் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதிலேயே கூட்டணி கட்சிகள் குறியாக இருந்து வருகின்றன.

தமிழகம், கேரளத்தில் காங்கிரசுக்கு என தனி ஆதரவு வளையம் உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், உத்தரகாண்ட், ஹிமாச்சல் என பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே சுமார் 200 தொகுதிகளில் நேரடி போட்டி நிலவுகிறது.

இவற்றில் 90 சதவீத தொகுதிகளை கடந்த இரு தேர்தல்களில் பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் மத்தியில் கூட்டணியுடன் ஆட்சியை பிடிக்க வேண்டுமெனில் இந்த 200 தொகுதிகளில் குறைந்தபட்சம் 60 தொகுதிகளையாவது காங்கிரஸ் வெல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதற்கு வலுவான பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்தாக வேண்டும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடிப்படையில், நாடு முழுவதும் தேர்தல் நடந்தால் அது மோடிக்கே மிகப்பெரிய வாய்ப்பாக மாறும். அதுவும் காங்கிரசுக்கு பின்னடைவை கொடுக்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தென்னிந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவில் மொத்தம் 200 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

இதில் 50 இல் கூட பாஜகவால் வெற்றி பெற முடியாது. எனவே, இத்தொகுதிகளில் காங்கிரசால் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்ற முடியும். அதற்கு கட்சியை கட்டமைப்பு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மறுகட்டமைப்பு செய்வது அவசியம் என பிரபல அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பாஜகவுடன் நேரடியாக மோதும் 200 தொகுதிகள், தென்னிந்தியா, கிழக்கு இந்தியாவில் உள்ள 200 தொகுதிகள் என 400 தொகுதிகளில் குறைந்தபட்சம் 120 தொகுதிகளை காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டால் மீண்டும் புத்துயிர் பெற முடியும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. அதற்கு காங்கிரஸ் முதலில் செய்ய வேண்டியது வலுவான பிரதமர் வேட்பாளரை இப்போதே அறிவித்து முன்கூட்டியே களத்தில் குதித்தாக வேண்டும். அது பிரியங்கா காந்தியா அல்லது ராகுல் காந்தியா என்பது காங்கிரஸ் தலைமையின் கையில் தான் உள்ளது.