வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணியின் இல்லம் உட்பட அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லம் அலுவலகங்களில் இன்று காலை முதல் தமிழகம் உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை வடவள்ளி பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்திரசேகர் (கோவை தெற்கு புறநகர் இளைஞரணி செயலாளர்) இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 10 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் சோதனை முடிந்து அதிகாரிகள் திரும்பினர். அப்போது இல்லத்திற்கு வெளியில் திரண்டிருந்த அதிமுக ஆதரவாளர்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளை சூழ்ந்து திமுகவை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து வெளியில் வந்த சந்திரசேகரின் மனைவி சர்மிளா சந்திரசேகர் (38 வது வார்டு மாமன்ற உறுப்பினர்) திரண்டிருந்த ஆதரவாளர்களிடம் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் தங்களுக்காக காலையிலிருந்து காத்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை முடிந்து அளித்துள்ள நோட்டீசை காண்பிக்க மறுத்துவிட்டார்.

சோதனைக்கு இடையில் அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கு குளிர் பானங்கள் உணவு குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.