மகாசிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையில் குவிந்த பக்தர்கள்

மகாசிவராத்திரியை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் சாமிதரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வனத்துறை – வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர்

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று முதல் வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலையேறுவதற்கு அனுமதி என தகவல் அறிந்ததும் கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, மதுரை, சென்னை, திருச்சி உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவைக்கு வந்த வண்ணம் உள்ளனர். மலையேறுவதற்கு முன்பு பக்தர்கள் அனைவரும் வனத்துறை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து வனப் பகுதிக்குள் செல்வதால் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தவர்களிடம் அதனை பறிமுதல் செய்து விட்டு மலையேறுவதற்கு அனுமதித்தனர். மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் கூட்டமாக செல்ல வேண்டும். யாரும் தனியாக செல்ல வேண்டாம். மிகுந்த கவனத்தோடு சென்று திரும்ப வேண்டும் என்றும், குப்பைகளை ஆங்காங்கே வீசக் கூடாது என்றும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர். 2 ஆண்டுகளுக்கு பிறகு மலையேற அனுமதி கிடைத்துள்ளதால் வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.