வெற்றி தோல்வி பற்றி நான் சிந்திக்கவில்லை

சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு குட்டி கதைகளைக் கூறி அவர்களை ஊக்கப்படுத்துகிறோம். அவ்வாறு கதைகள் கூறும்போது, ஒவ்வொரு குழந்தையும் கதையில் இருக்கும் கதாநாயகன் நாம்தான் என்று ஒரு கற்பனை உலகத்தில் வாழ்கின்றனர். இதுபோன்ற குழந்தைகள் தங்களது குழந்தைப் பருவத்தைக் கடந்து இளம் வயதைத் தொடும்போது நாம் ஏன் திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்ற எண்ணம் வருவது வழக்கம். இதுபோன்ற எண்ணத்தில் சிறு வயதில் இருந்தே விளம்பரப் படங்களில் நடிக்க வேண்டும். அதில் முதன்மை பெற வேண்டும் என்று எண்ணி, ஆனால் அதற்கான எந்த சினிமா பின்புலனும் இல்லாமல், தனது திறமையால் வெற்றி பெறுவேன் என்ற தன்னமிக்கையுடன் போராடுபவர்கள் ஒருசிலரே. அவர்களால் ஒருவர்தான் பல முன்னணி விளம்பரப் படங்களில் நடித்து வரும் மோனா ஜெயின். அவர் நமது பத்திரிக்கைக்கு அளித்த சிறப்புப் பேட்டி…

‘‘கோவை எனக்குப் பிடித்த ஊர். மரியாதையாக பேசக் கூடிய நண்பர்களை இங்கே அதிகம் பார்க்கலாம். எப்போதும் ஒரு பெண்ணின் ஆசை எது என்பதை யாரும் கேட்க மாட்டார்கள். மேலும் தங்கள் பாதுகாப்பு கருதி சில விஷயங்களை பெண்கள் தமக்கென¢று ஒரு வேலி அமைத்துக் கொண்டு வாழும் சூழல் ஏற்படுகிறது. எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது எனது ஆசை. வெற்றியை நாம்தான் தேடிச் செல்ல வேண்டும்.

அழகான வாழ்க்கை அமைந்துவிட்டதாலேயே, ஒரு பெண் வெற்றி பெற்றதாக அர்த்தம் கிடையாது. அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த எண்ணம் எனக்கு பள்ளி படிக்கும்போதே வந்துவிட்டது. பெண்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் அவர்களது வெற்றிக்கு சரியான வழித்தடம் எது என்று யாரும் காண்பிக்கவில்லை. பிறகு கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நமக்கு பிடித்த செயலில் இறங்கி அதில் நாம் வெற்றி பெற வேண்டும் என எண்ணினேன். அப்போது, விளம்பரப் படங்களில் நடிக்க வேண்டும் எனத் தோன்றியது.

அதற்காக என்னைத் தயார்ப்படுத்த மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகமாகத் தேவைப்பட்டது. இந்த துறையில் வெற்றி, தோல்வி குறித்து சிந்திக்கவில்லை.

பிடித்த விஷயத்தை செய்யப் போகிறோம் என்ற சிந்தனை மட்டும்தான் இருந்தது. விளம்பரப் படத்தில் நடிப்பதற்குத் தேவையான முக பாவனை, உடல் தோற்றம் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு மிகக் கச்சிதமாக என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு களத்தில் இறங்கி விட்டேன். அதற்குப் பிறகு Photographer ஆனந்த் கிருஷ்ணன் அவர்கள் என்னை அழகாக புகைப்படம் எடுத்துக் கொடுத்தார். ஒரு நல்ல விஷயம் நடப்பதற்கு முன்பு ஒரு மாயாஜால செயல் நமக்கு நடக்கும். அதை ஆனந்த் கிருஷ்ணன் எடுத்த புகைப்படம் நிரூபித்தது. அவர் எடுத்த புகைப்படத்தை பார்த்த பலர் என்னை அவர்கள் விளம்பரப் படங்களில் நடிக்க அழைத்தனர்.

அப்படியே படிப்படியாக இந்த துறைக்குள் வந்து விட்டேன். முதலில் என் பெற்றோருக்கு சிறு பயம் இருந்தது. இத்துறையில் நான் வெற்றி பெறுவேனா என்ற அவர்களின் அச்சத்தைப் போக்கித் தொடர்ந்து பல முன்னணி விளம்பரப் படங்களில் நடித்து வருகிறேன்.

எனக்கு ரோல் மாடல் என்று யாரும் கிடையாது, என் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதை மட்டும் கேட்கக் கூடியவள்.

நடிகர் விஜய், விஜய் சேதுபதி எனக்குப் பிடித்த நடிகர்கள். அவர்கள் படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த சமயத்தில் சில விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டு இருந்தால் நடிக்க முடியவில்லை. எந்த ஒரு செயலாகட்டும், அதை பாதியில் நிறுத்திவிட்டு அடுத்த வேலைக்குப் போகக் கூடாது என்பதை எனது பாலிசியாக வைத்துள்ளேன். தற்போது மூன்று தமிழ்ப் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.

பெண்கள் நிச்சயமாக இந்தத் துறைக்கு வர வேண்டும். ஒரு பிரச்னை என்றால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவம் பெண்கள் அனைவருக்கும் வேண்டும். பல பெண்கள் தேவையின்றி பயப்படுவதால் அடிமைகளாக இருக்கிறார்கள். நம்மால் முடியும் என்று காண்பிக்கும்போது நம் ஆசைகள், இலட்சியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்’’.