மாற்றுப்பாதை உருவாகிறதா?

பொதுவாக உலக அளவில் இரு நாடுகளுக்கோ, அல்லது இரு மாநிலங்களுக்கோ இடையில் ஏற்படும் சிக்கல்களோ, திட்டங்களோ குறித்த பேச்சு வார்த்தை என்பது அதிகாரப்பூர்வமாக உள்ள இரு நாட்டு தலைவர்கள் அல்லது பிரதிநிதிகளோதான் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம். ஆனால் சில நேரங்களில் இந்த இலக்கண வரம்பைத் தாண்டி சில பாடல்கள் எழுதப்படுவதுண்டு.

இந்த மாற்றம் எதிர்காலத்துக்கான சில அறிகுறிகளையும் அளிக்கக்கூடும். சமீபத்தில் தமிழகத்தில் நடைபெறும் சில சம்பவங்கள் இதை நினைவூட்டுகின்றன. குறிப்பாக கமல், ரஜினி ஆகியோரின் அரசியல் தொடர்பான காய் நகர்த்தல்கள் இந்த வகையில் அமைவதாக அரசியலை கூர்ந்து கவனித்து வருவோர் கருதுகின்றனர். தற்போது இரண்டு பெரும் கட்சிகளின் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவர்களாக  கலைஞர் கருணாநிதியும், செல்வி ஜெயலலிதாவும் இருந்தனர். தற்போது அவர்கள் இல்லாத அரசியல் சூழ்நிலையில் பலவிதமான குழப்பங்களும், நடைமுறைச் சிக்கல்களும் தொடர்வதாகவே தோன்றுகிறது.

குறிப்பாக காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒரு வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் திறந்து விட வேண்டிய தண்ணீர் எவ்வாறு திறக்கப்படும் என்பது குறித்து ஒரு தெளிவும் இல்லை. தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை காவிரி மேலாண்மை வாரியம் கடைப்பிடித்து நீர் திறப்பை உறுதி செய்ய வேண்டும் என குரல் கொடுக்கின்றன. ஆனால் கர்நாடக மாநிலம் சார்ந்த குரல்களில் இதற்கு ஆதரவு இருப்பதாக தெரியவில்லை. எங்களுக்கே தண்ணீர் இல்லை என்று தான் அந்த குரல்கள் பொதுவாக சொல்கிறது. அடுத்த மாதம் கர்நாடக அரசு என்ன செய்யப்போகிறது? காவிரி வாரியம்  என்ன செய்யப்போகிறது? இதற்கு மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என்பது எல்லாம் என்றும் புரியவில்லை. இறுதித்தீர்ப்பு வந்து விட்டது சரி, ஆனால் தண்ணீர் எவ்வாறு திறக்கப்படும் என்பது தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

இந்த நிலையில்தான் மக்கள் நீதி மய்ய அரசியல் இயக்க தலைவர் நடிகர் கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து பேசினார். அப்போது பேச்சு வார்த்ததை  மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும் என்ற நல்வாக்கும் வெளிபட்டிருக்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் இப்பிரச்னையில் அமைதியாக இருக்கும் நிலையில் இவர் ஒரு புது பிரச்னையை கிளப்பியதாகாதா என்ற கேள்வி எழுகிறது.

தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சியும், மனிதரும் யார் ஒருவரையும் சந்திப்பதற்கும், ஒரு கருத்தை சொல்வதற்கும் உரிமை உண்டு. ஆனால் நூற்றாண்டு பழமை வாய்ந்த சிக்கலான காவிரி நதிநீர் பிரச்னையில் புதிய வரவான நடிகர் கமல் நுழைந்திருப்பது அவருக்கும், அவரது கட்சிக்கும் வேண்டுமானால் நல்லது. ஆனால் தமிழகத்துக்கும், விவசாயிகளுக்கும் நல்லதா? என்ற கேள்வி இங்கே எழுகிறது.

மற்ற பல சிக்கல்கள் குறித்து கருத்து சொல்வதற்கும், செயல்படுவற்கும் இப்பிரச்னையில் வேறுபாடு உண்டு. அதில் நடிகர் கமல் நான் மக்கள் பிரதிநிதியாக சென்றுள்ளேன் என்று கூறுவது பல ஐயங்களை கிளப்புகிறது. அதிலும் இவர் ஒரு முதலமைச்சரை சந்தித்து இவ்வாறு கேட்பதும், அதற்கு அவர் அதற்கு பதிலளிப்பதும் குழப்பமாக உள்ளது. கூடவே கமல் கட்சி தொடங்கிய மேடையில் இருந்த விவசாய தலைவர்கள் வேறு அமைப்பினருடன் பேட்டி தருவது கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

நாட்டில் பல சிக்கல்கள் இருக்கும் போது இப்படி செயல்படுவது மக்கள் நலனுக்காகவா?, அல்லது அரசியல் ஸ்டண்ட்டா?

அதைப்போலவே, தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினி பெரிய அளவில் என்ன சாதித்தார் என்றும் புரியவில்லை. அவரது ஆவேச பேட்டியும் சர்ச்சசையை கிளப்பியது. அதற்கு அடுத்து காலா படத்திற்கான சர்ச்சையும் கிளம்பியுள்ளது. இவைகள் மக்களை திசைதிருப்ப்பும் முயற் சிக்கு பயன்படுகிறதா? மீண்டும் இங்கே இரண்டு கேள்விகள் எழுகின்றன. இந்த இரண்டு பெரிய நடிகர்களும் பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வருகிறார்கள். சிற்சில சமயங்கள் தவிர்த்து வேறொன்றும் பெரிதாக பேசியதாகவோ செய்ததாகவோ இதுவரை இல்லை. தற்போது ஏன்? இரண்டாவது கேள்வி, இவர்கள் தங்களது இயக்கத்தின் எதிர்கால மக்கள் நலத்திட்டங்கள் என்ன என்பதை இன்னும் சொல்லவில்லை? அதை எவ்வாறு செயல்படுத்தப்போகிறார்கள்? முதலில் இவ்விரண்டு கேள்விகளுக்கும் தெளிவாக பதில் உரைக்க வேண்டும். இனிமேல் வரப்போகும் தேர்தல் காலம்வரை  மக்களை குழப்பி, கடைசி வரை காக்கவைத்து விட்டு என்ன செய்யப்போகிறார்கள்? நேரடி விவாதங்களில் இந்த வினாக்கள் குறித்து பொதுத்தளத்தில் பேசப்பட வேண்டும். அதற்கு அவர்கள் பதில் கூற வேண்டும். வெரும் அறிக்கைகள், பேட்டிகள் இல்லாமல் மக்களுக்கு உண்மையாகவும் தெளிவாகவும் புரியும்படி பதில் இவர்கள் கூற வேண்டும். இவர்கள் மக்களுக்கு என்ன செய்ய இருக்கிறார்கள்? இது தெரிந்தால்தான் மக்களும் இவர்கள் குறித்து தெளிவான ஒரு முடிவு எடுக்க முடியும்.

– ஆசிரியர் குழு…