எம்.ஜி ஆர் பிறந்த நாள்: அதிமுக அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்- ன் 105வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்-ன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், ஏழைகளின் பங்காளன், இதயக்கனி இவ்வாறு பல பட்ட பெயர்களுடன் அழைக்கப்பட்டவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

அதிமுக என்ற கட்சியை நிறுவி, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து பல நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்த எம்.ஜி.ஆர்-க்கு இன்று 105வது பிறந்த நாள்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிறந்தநாள் விழாவை சமூக இடைவெளியுடன் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அதிமுகவினருக்கு அறிவுறுத்தி இருந்தார்.

அதன் பெயரில் கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராம் தலைமையில் எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொது மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதேபோல் பேரூரில் அதிமுக பேரூர் ஒன்றியச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் பேரூரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.