ஜி.எஸ்.டி யோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும்

 
– இந்திய தொழில் வர்த்தக சபையில் வழக்கறிஞர் நடராஜன் பேச்சு!

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில் “2022 ஜனவரி முதல் அமலுக்கு வரும் முக்கிய ஜி.எஸ்.டி மாற்றங்கள்” குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டது.

நிகழ்வில் இந்த சபையின் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சென்னையை சேர்ந்த ஸ்வாமி அஸோஸியேட்ஸ் நிறுவனத்தின் மூத்த உறுப்பினரும், வழக்கறிஞருமான நடராஜன் ஜி.எஸ்.டி மாற்றங்கள் பற்றி பேசினார்.

சரக்கு மற்றும் சேவை வரியில் ஜி.எஸ்.டியில் அமையவிருக்கும் மாற்றங்களினால் வரக்கூடிய தாக்கம் பெருநிறுவனங்கள் மீது மட்டுமல்லாது சாமானியர்கள் மீதும் இருக்கும், எனவே அந்த மாற்றங்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டு, அதை பற்றி ஆலோசித்து, உரிய வேண்டுகோளுக்காக அரசிடம் முறையிடுவது ஆகியவற்றிக்கு இந்த கூட்டம் பெரிதும் உதவும் என்று பதிவிட்டார்.

இ -காமர்ஸ் எனப்படும் இணையவழி வணிகங்களில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து முதலில் பேசினார். அவர் கூறுகையில், இ -காமர்ஸ் முறையில் ஒருங்கிணைக்கப்படாத சிறு தொழில்கள் செய்பவர்களும் உள்ளனர், ஒருங்கிணைந்து ஈ-காமர்ஸ் தொழில்களை இயக்குபவர்களும் உள்ளனர். எனவே அவர்களை சரியாக கண்டறிந்து, அவரவர்க்கு உரிய வரிகளை வரையறை செய்வது என்பது சாதாரண ஒன்றல்ல, என்றார். மேலும் இ-காமர்ஸ் முறையில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து விவரித்தார்.

மேலும் அவர், அரசு நிறுவனங்களுக்கு சேவை வழங்கும்போது கிடைக்கக்கூடிய ஜி.எஸ்.டி சலுகைகளில் கொன்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி பேசினார். 90% அரசின் கட்டுப்பாட்டில் இயக்கப்படும் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் பட்சத்தில் தான், இதற்கு முன் கிடைத்த சில ஜி.எஸ்.டி சலுகைகள் இனி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டினார். தொடர்ந்து அவர் ஜவுளி துறை, காலணி துறை சந்திக்கப்படவுள்ள மாற்றங்கள் பற்றியும் விரிவுபடுத்தினார்.

அவரது பேச்சிற்கு பின், சபை உறுப்பினர்கள் ஜி.எஸ்.டி சம்மந்தமான தங்கள் கேள்விகளை எழுப்பி பதில் பெற்றுக் கொண்டனர்.