மனநலம் பாதிக்கப்பட்டவரை உபசரித்த ஹோட்டல் அன்னபூர்ணா

சுந்தராபுரத்தில் உள்ள ஹோட்டல் அன்னபூர்ணாவில் இன்று காலை வாடிக்கையாளர்கள் உணவருந்தி கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் சற்று வித்தியாசமான உடையில் வந்து சாப்பிடும் இருக்கையில் அமர்ந்தார்.

ஹோட்டல் பணியாளர்கள் அவரிடம் விசாரிக்கையில் தனக்கு சாப்பிட ஏதாவது தரும்படி கேட்க, அவரது நடவடிக்கையும், உடல் மொழியும் பணியாளர்களுக்கு சற்று சந்தேகமாக தெரிந்ததால் சாப்பிடும் உணவு வகைகளையும் அதன் விலையையும் கூறினர். அவரும் தனக்கு இட்லி, பூரி வேண்டுமென ஆர்டர் கொடுத்தார். வந்திருந்தவரைப் பார்த்தாலே அவர் பணம் தருவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தது.

இதனைப் பார்த்து கொண்டிருந்த ஒருவர் பணியாளரிடம், “அவர் கேட்பதை கொடுத்து விடுங்கள், பணம் தரவில்லையென்றால் பரவாயில்லை” என்று கூறினார். வந்தவரும் நன்றாக சாப்பிட்டு கிளம்பினார். சாப்பிட வந்தவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது அவர் வெளியே நடந்து செல்கையில் தெரிந்தது. அவர் கேட்பதை கொடுங்கள் என கூறியவர் யார் என விசாரிக்கையில் “ஹோட்டல் மேலாளர்” என்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் பணம் தர முடியாது என தெரிந்தும் வாடிக்கையாளரைப் போல உபசரித்த ஹோட்டல் ஊழியர்களுக்கும், மேலாளருக்கு வாழ்த்துகள்.