ஒலித்தது ஒரு குரல்! இணைந்தன இரு கரங்கள்!!

கடந்த டிச.6 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக,  ஏன் பொதுச்செயலராகக் கூட எடப்பாடி பழனிசாமி வர முயற்சி செய்கிறார் என்ற தகவல் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பரவியது.

இந்த பரபரப்புக்கு இடையே கடந்த வாரம் சென்னையில் நடந்த அதிமுக செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிமுக சட்டவிதிகளை மறுபடியும் திருத்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே அதிமுக தலைமையை தேர்வு செய்ய முடியும் என்ற அறிவிப்பை கட்சித் தலைமை வெளியிட்டது. அதன்படி, ஒற்றை வாக்கில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரையும் தேர்வு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, இப்போது போட்டியின்றி மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேர்வுக்கு முன்பும், பின்பும் பல்வேறு அரசியல் நகர்வுகள் நடந்துள்ளன என்பதை கூர்ந்து பார்த்தால் நன்கு புரியும். அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப்பின் அவரின் தோழியும்,  அதிமுவின் நிழல் அதிகார மையமாக இருந்தவருமான வி.கே.சசிகலா தற்காலிகப் பொதுச்செயலராகப் பதவியேற்றார். ஆனால், அவர் சிறைக்குச் சென்றபிறகு பல்வேறு அரசியல் மாற்றங்களை அதிமுக எதிர்கொண்டது.

அக்கால கட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தாலும்கூட, அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா,  டி.டி.வி.தினகரனுக்கு அடுத்து 3 வது அதிகார மையமாகவே இருந்தார். இந்நிலையில், தனது அரசியல் சாதுர்யத்தால் தனக்கு மேல் அதிகார மையத்தில் இருந்த சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டு, அதிமுகவுக்கு வெளியில் இருந்த பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொண்டு அதிமுகவின் முதல் அதிகார மையமாக மாறினார். அதிகாரமே இல்லாமல் இருந்த பன்னீர்செல்வத்துக்கு ஆட்சியில் துணை முதல்வர் என்ற வகையில் ஆட்சியில் இரண்டாவது இடமும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் இணையான இடமும் கிடைத்தது. அதாவது ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுகவில் 2 வது அதிகார மையமாக மாறினார் பன்னீர்செல்வம்.

எப்போதுமே சார்ந்து நின்று பழக்கப்பட்ட பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொண்டால் தான் அதிகார மையத்தில் முதலிடத்தைப் பெறுவதுடன், தன்னை எக்கால  கட்டத்திலும் சார்ந்து தான் பன்னீர்செல்வம் நிற்பார் என்பதை துல்லியமாக கணக்குப் போட்டது தான் எடப்பாடி பழனிசாமியின் உச்சகட்ட ராஜதந்திரம். இதன் மூலம் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது கட்சியையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.

ஆனால், பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும்,  எம்.எல்.ஏக்களில் 90 சதவீதம் பேர்,  மாவட்டச் செயலர்களில் 90 சதவீதம் பேர் என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கட்சியில் முதல் அதிகார மையமாகவே இருந்தார். இருப்பினும், கருணாநிதியிடம், நெடுஞ்செழியன் கட்சி அதிகாரத்தை விட்டுக்கொடுத்தது போல தான் இருக்கப் போவதில்லை என்பதை உணர்த்தும் வகையில், கட்சியில் தனது இருப்பை தொடர்ந்து அதிகரிக்கும் முயற்சியில் பன்னீர்செல்வம் இறங்கினார். அதற்காக ஒரு கட்டத்தில் பாஜகவை கூட ஆயுதமாக பயன்படுத்தினார். அதேநேரத்தில் சசிகலாவைப் பயன்படுத்தி மீண்டும் அதிமுகவில் தனது அதிகாரத்தை உயர்த்த பன்னீர்செல்வம் முயன்றபோது அது எடுபடவில்லை.

இதற்கிடையே,  அதிமுகவின் மாவட்டச் செயலர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் இரண்டு வாரத்துக்கு முன்பு சென்னையில் நடந்தது. அதில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியும், ஜெயலலிதாவின் முக்கிய தளபதியாகவும், ஒரு கட்டத்தில் சசிகலாவின் போட்டியாளராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன் எழுப்பிய கலகக் குரல்தான் மீண்டும் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு அதிர்வலையை கொடுத்தது.

அதாவது அவர் பேசும்போது, கட்சியின் வழிகாட்டுதல் குழுவை 11-இல் இருந்து 18 ஆக உயர்த்துவதுடன்,  அதற்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் அதிர்ந்து போன எடப்பாடி பழனிசாமி எழுந்து,  இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அல்ல எனக் கூறி உடனடியாகக் கூட்டத்தை முடித்தார்.  தமிழகம் முழுவதும் ஆதரவாளர்களைக் கொண்ட செங்கோட்டையன் குரலுக்கு கட்சியில் வலு கிடைக்கக்கூடும் என்பதையும், அதுவே எதிர்காலத்தில் தங்களது கட்சித் தலைமைக்கு எதிரான கலகக் குரலாக மாறக்கூடும் என்றும், கட்சிக்கு வெளியே இருக்கும் சசிகலா, செங்கோட்டையனை பலப்படுத்தி தனக்கு குடைச்சல் கொடுத்துவிடக்கூடும் என்பதையும்  எடப்பாடி பழனிசாமி முன்பே கணித்திருக்கக் கூடும்.

இதனால், ஒற்றைத் தலைமைக்கு முயற்சி செய்துகொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, எப்போதும் சார்ந்து நிற்கும் பழக்கம் கொண்ட பன்னீர்செல்வத்துடன் இரட்டைத் தலைமையாகவே நீடித்தால் தான் அதிமுகவின் அதிகாரம் தன் கையில் உறுதியாக இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டார். எனவே, அடுத்த ஒரு சில நாள்களில் அதிமுக செயற்குழுவை கூட்டி பொதுக்குழுவால் அதிமுக தலைமையை, அதாவது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்வு செய்யலாம் என முன்பு இருந்த சட்ட விதிகளை மாற்றி,  எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல தொண்டர்களால் தான் கட்சித் தலைமையை தேர்வு செய்ய முடியும் என்ற அறிவிப்பை வெளியிட்டனர்.

அவசர அவசரமாக தேர்தலையும் அறிவித்து போட்டியின்றி மீண்டும் இருவருமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருவேளை பொதுக்குழு மூலமாக கட்சித் தலைமையை தேர்வு செய்யலாம் என்ற விதி தொடர்ந்தால் செங்கோட்டையன் போன்ற மூத்த அரசியல்வாதிகளால் பொதுக்குழுவை கூட்டி தங்களது பதவிக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே உணர்ந்து கொண்டதால்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

கட்சித் தொண்டர்களால் போட்டியின்றி கட்சித் தலைமை பதவிகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டு விட்டதால் இனிமேல் கட்சியின் மாவட்டச் செயலர்கள், மாவட்டப் பிரதிநிதிகள், ஒன்றியச் செயலர்கள், கிளை செயலர்கள் என எந்த பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல் வந்தாலும் இந்த இரட்டையர்களின் கண் அசைவு இன்றி யாரும் பதவிக்கு வர முடியாது என்ற நிலையை ஓபிஎஸ், இபிஎஸ் இப்போது உருவாக்கி விட்டனர்.  மேலும், அதிமுகவுக்கு இனிமேல் இரட்டைத் தலைமை தான் என்பதையும், தங்களது வாழ்நாள் முழுவதும் இதே பதவியில் தான் தொடர்வோம் என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அவர்களை எதிர்த்தோ அல்லது மீறியோ யாரும் கட்சி அதிகாரத்தில் நீடிக்க முடியாது. அதேபோல இனிமேல், அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரில் ஒருவரை மட்டும் ஆதரித்துக்கொண்டு மற்றொருவரை எதிர்த்தோ, இருவரையும் மீறியோ யாரும் கட்சியில் அதிகாரத்தில் நீடிக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.  இவர்கள் இருவரும் இரட்டை இலையில் கையெழுத்திடும் உரிமையை தங்களில் ஒருவருக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் செயலில் உணர்த்திக் கொண்டே செல்கின்றனர். இது அதிமுக இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மட்டுமல்ல, அதிமுக தொண்டர்களுக்கும் நன்கு புரிந்திருக்கும்.

இதற்கு சிறந்த உதாரணம், கடந்த நான்கரை ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக அறியப்பட்ட தளவாய்சுந்தரம், ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் ஓபிஎஸ் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதுவே அதிமுகவில் யார் நீடிக்க வேண்டும் என்றாலும் இருவரின் ஆதரவும் வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

இனிமேல் அதிமுக, இரட்டை இலை என்றால், ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரட்டையர்கள் தான் என்ற சூழல் உருவாகிவிட்டது. இவர்களில் ஒருவர் ஒற்றைத் தலைமைக்கு முயற்சி செய்தால் இரட்டை இலை இருக்காது என்பது தான் உண்மை.

எடப்பாடியின் அரசியல் கணக்கு என்ன?

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, அதிமுகவைப் போன்ற 1.5 கோடி தொண்டர்ளை கொண்ட கட்சியில் தொண்டர்கள்  வாக்களித்து கட்சித் தலைமையை தேர்வு செய்வது என்பது இயலாத காரியம்.  எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டனர். தொண்டர்களால் தான் கட்சித் தலைமையை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி  என்பது கட்சி ஆட்சியில் இல்லாத போதும் கட்சித் தலைமைக்கு யாரும் எதிராக குரல் எழுப்ப முடியாத சூழலை உருவாக்கும்.

இதற்கு சிறந்த உதாரணம், 1994 ஆம் ஆண்டே ஜெயலலிதா போட்டியின்றி பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார்.  1997 இல் கட்சித் தோல்வி அடைந்தபோது திருநாவுக்கரசர், தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 8 எம்.எல்.ஏ.க்களில் 4 எம்.எல்.ஏ.க்களையும், 14 மாநிலங்களவை உறுப்பினர்களில் 7 பேரையும் தன் வசப்படுத்தியிருந்தார்.

அதுபோக, கட்சி நிர்வாகிகளில் கணிசமான ஆதரவைப் பெற்றுக்கொண்டு சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் போட்டி பொதுக்குழுவை நடத்தினார்.  அந்த தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் கொடுத்தபோது தேர்தல் ஆணையம் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைமையிடமே கட்சியும்,  சின்னமும் இருக்கும் என தீர்ப்பளித்தது.

ஆக, பலவீனமான நிலையில் இருந்தபோதும்கூட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலர் என்ற கவசம் தான் காப்பாற்றியது. இப்போதும் செங்கோட்டையன் பேச்சை அடுத்து அதுபோன்ற ஒரு சூழல் உருவாகிவிடக்கூடாது என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி தன்னையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்களாக உருமாற்றிக்கொண்டார்.  இது இனிமேல் இவர்கள் காலம் வரை இருவருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

அதேவேளை இரட்டைத் தலைமைக்கு சம்மதித்ததால் 2026 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அதிமுக முதல்வர் வேட்பாளராக வருவதற்கு, பன்னீர்செல்வம் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கக்கூடும். அப்போது எதுபோன்ற அரசியல் நகர்வுகள் நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.