வலிப்பு நோய்க்கு நிரந்தரத் தீர்வு

-டாக்டர் ராஜேஷ் சங்கர் ஐயர், நரம்பியல் நோய் மற்றும் வலிப்பு நோய் நிபுணர், கே.எம்.சி.ஹெச்

வலிப்பு நோய் குறித்த தவறான புரிதல்களால், நவீன சிகிச்சைகள் இருப்பது பொதுமக்களுக்கு தெரியவில்லை. ஆனால், வலிப்பு நோய் என்பது குணப்படுத்தக் கூடிய ஒன்று.

மருந்துகள் மூலம் தீர்வு

வலிப்பு நோயாளிகள் பலருக்கு மருந்துகளிலேயே குணப்படுத்த முடியும். ஆனால், 30 சதவீதம் பேருக்கு அது இயலாது. அதை ‘ட்ரக் ரெஸிஸ்டண்ட் எபிலெப்சி’ (Drug Resistant Epilepsy) என்பர். இவர்களின் வாழ்க்கைத் தரம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கும். மருந்தினால், கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோயாளிகளுக்கும் தீர்வு உள்ளது.

வலிப்பு நோய், அதன் தன்மை குறித்து கண்டறிய பல பரிசோதனைகள் உள்ளன. இதில் வீடியோ இ.இ.ஜி. முக்கியமான ஒன்று. இப்பரிசோதனையில், நோயாளிகள் மருத்துவமனையில் ஒரு நாள் முதல் ஒரு வாரம் வரை அனுமதிக்கப்பட்டு, மூளையில், ஏற்படும் அதிர்வுகள் பதிவு செய்யப்படும். மேலும், வலிப்பு நோய் ஏற்படுகையில், மூளையின் எந்தப் பகுதியில் இருந்து, அதை ஏற்படுத்தும் அலை ஏற்படுகிறது என்பதை துல்லியமாக கண்டறிந்து, எவ்வகை வலிப்பு நோய் என்பது கண்டறியப்படும். அதற்கேற்றாற் போல், சிகிச்சை வழங்கப்படும்.

அடுத்ததாக பிரத்யேக தொழில்நுட்பங்களை கொண்ட. எபிலெப்சி (EPILEPSY) புரோட்டோகால் எம்.ஆர்.ஐ வலிப்பு ஏற்பட காரணமான அலை ஏற்படும் மூளையின் உட்பகுதியை மிகவும் உற்றுநோக்கி பார்க்க உதவும்.

வலிப்புக்கான காரணம் தெரிந்த பின் சிகிச்சைகள் தொடங்கப்பட்டு வலிப்பு நோயின் தன்மைக்கேற்ப, மருந்துகள் பரிந்துரைக்கப்படும். மருந்துகள் மூலமே சில நோயாளிகளுக்கு வாழ்க்கை முறை மாறி விடும். வலிப்பு நோய் உள்ளவர்கள் சரியான மருந்துகளை உட்கொள்ளவில்லை எனில் நோய் குணமடையாது.

அறுவை சிகிச்சை மூலம் தீர்வு

மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியாத வலிப்பு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வு அளிக்க முடியும்.

வலிப்பு நோயாளிகள், 5 முதல் 10 சதவீதம் பேருக்கு வீடியோ இ.இ.ஜி. மூலம் மூளை நரம்பில், ஏற்படும் அலை கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். நியூரோ நேவிகேஷன் என்ற எந்திரம் மூலம் மூளையின் குறிப்பிட்ட பகுதியை துல்லியமாக கண்டறிந்து அதை அகற்றி இதன் மூலம் மூளையில் பிற பகுதிகள் சேதமடைவது காக்கப்படும். சில நோயாளிகளுக்கு எலக்ட்ரோ கார்டிகோ கிராபி என்ற நவீன முறை மூலம் மூளைக்குள் வயரைப் பொருத்தி வலிப்புக்கான அலை எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிந்து அவற்றின் மூலமும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

வலிப்பு நோய் அறுவை சிகிச்சை என்பது, மிகவும் பாதுகாப்பான ஒன்று, நோயாளி குணமடையும் காலமும் மிகவும் குறைவே. நோயாளிகள் ஓரிரு வாரங்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்பலாம். அவர்களது அன்றாடப் பணிகளை மேற்கொள்ளலாம். அறுவை சிகிச்சைக்கு பின் மருந்துகள் எடுத்துக் கொள்வது அவசியம். இது வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தும்.

மேற்கு தமிழ்நாட்டில், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில், 100 க்கும் மேற்பட்ட வலிப்பு நோய் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.