உணவு தன்னிறைவிற்கான பயிர் பாதுகாப்பு பற்றிய சர்வதேச கருத்தரங்கு

தமிழ்நாடு வேளாண்மைப் பொன்விழா கொண்டாட்டங்களின் பல்கலைக்கழக நினைவாக உணவு தன்னிறைவிற்கான பயிர் பாதுகாப்பு பற்றிய சர்வதேச கருத்தரங்கு டிசம்பர் 8 முதல் 10, 2021 வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மையம் ஏற்பாடு செய்துள்ளது. மாநாட்டின் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. பூச்சியியல் துறை பேராசிரியர், தலைவர் மற்றும் மாநாட்டின் அமைப்பு செயலாளர் சாத்தையா வரவேற்றார். மாநாட்டின் அமைப்பு தலைவரும் பயிர் பாதுகாப்பு மைய இயக்குநருமான பிரபாகர் மாநாட்டின் முக்கியத்துவத்தை விவரித்து மாறிவரும் காலநிலையில் படைப்புழு, ரூகோஸ் சுருள் வெள்ளைஈ, நெற்பழநோய், தென்னைவேர் வாடல், கொய்யாவாடல் நோய் மற்றும் நூற்புழுவின் தாக்கம் மற்றும் இவற்றை பாதுகாக்க பயிர் பாதுகாப்பில் புதிய யுத்திகளை பயன்படுத்தி மறு வரையறை செய்ய வலியுறுத்தினார்.

புதுதில்லி இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையின் வேளாண் ஆணையர் மல்ஹோத்ரா இணைய வழிவாயிலாக மாநாட்டை துவக்கிவைத்தார். மாநாட்டின் கருத்துருவை அவர் பாராட்டியதுடன் பசுமை பூச்சிக் கொல்லிகள், புதிய மூலக்கூறுகள், உயிரிமுறைக் கட்டுப்பாட்டு பொருள்களின் தரநிர்ணயம், ட்ரோன் பயன்பாடு, உயிர் ஊக்கிகளின் தரப்படுத்தலுக்கான சோதனைகளை நடத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தினார்.

சென்னை ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் பத்மவிபூஷன் சுவாமிநாதன் அவர்களின் வாழ்த்துச்செய்தி வாசிக்கப்பட்டது. பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திரபிரசாத் சிறப்புரையாற்றி, 2050ல் உணவு உற்பத்தி சவால்கள், பருவநிலை மாறுபாடு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ஆகியவற்றில் உணவு உற்பத்தியைத் தக்கவைக்கவும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் வலியுறுத்தினார். நபார்டு வங்கியின் துணைப் பொதுமேலாளர் வசீகரன் பாராட்டுரை வழங்கி, பூச்சிக்கொல்லி இல்லாததரமான உணவு உற்பத்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் செயல் துணைவேந்தரும் பதிவாளருமான கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி அயல் நாட்டிலிருந்து வந்த பூச்சிகள் மற்றும் நோய்கள், தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமை, மற்றும் உலகளாவிய கண்ணோட்டத்திற்கான தொழில்துறைகளின் ஒத்துழைப்பு பற்றி சிறப்புரை வழங்கி மாநாட்டு புத்தகங்கள் மற்றும் பல்வேறுபயிர் பாதுகாப்பு பற்றிய புத்தகங்களையும் வெளியிட்டார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 575 விஞ்ஞானிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதில் 17 அயல்நாட்டு விஞ்ஞானிகள் உட்பட 63 விஞ்ஞானிகள் தங்களுடைய சிறப்பு ஆய்வு கட்டுரைகளை விவாதித்தனர். மொத்தம் பயிர் பாதுகாப்பு பற்றிய 725 ஆய்வுக்கட்டுரைகள் எடுத்துரைக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டுள்ளது.