3 வது மொழியைக் கற்க கட்டாயப்படுத்தக்கூடாது – அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் 3-வது மொழியை கற்க கட்டாயப்படுத்த கூடாது என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகம் புதுதில்லி தலைவர் (பொறுப்பு) கனகசபாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சங்க காலத்தில் பெண் புலவர்கள் அதிக அளவு இருந்தனர். கலாச்சார படையெடுப்பிற்குப் பின் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக்கூறி பெண்களின் கல்வியை தடுத்துவிட்டனர். தற்பொழுது மீண்டும் பெண்கள் அதிக அளவில் படிக்க தொடங்கியுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் படித்து பட்டம் பெறுகின்றனர். சங்க காலம் மீண்டும் திரும்புகிறது

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் நடைமுறையில் உள்ளது இரு மொழிக் கொள்கைக்கு ஆளுநரும் ஆதரவு அளிக்க வேண்டும். மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்பும் மூன்றாவது மொழியை கற்று கொள்ளலாம், ஆனால் மூன்றாவது மொழி கற்க கட்டாயப்படுத்த கூடாது” என்றார்.