கோவை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 15.38 லட்சம் வாக்காளர்கள்

கோவை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ளார். அதன்படி மாநகரில் 15.38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் கடந்த 2018 ஆம் ஆண்டு வார்டு மறுவரையறை செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதனிடையே இன்று வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளில் 1290 வாக்குச்சாவடிகளும், 287 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆண் வாக்காளர்கள் 7,69,397 பெண் வாக்காளர்கள் 7,68,736 மற்றும் மூன்றாம் பாலினம் 278 ஆக மொத்தம் 15,38,411 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியல், மாநகராட்சி பிரதான அலுவலகம், மற்றும் 5 மண்டல அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.