டாக்டர் என்.ஜி.பி கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி தொடக்கம்!!!

டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியும், கோவை மாவட்ட சதுரங்க அமைப்பும் இணைந்து தமிழ்நாடு மாநில அளவில் 13 வயதுக்குக் கீழ் உள்ள இருபாலருக்குமான 31 ஆவது சதுரங்கப் போட்டியை மே 01 முதல் மே 05 வரை தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இப்போட்டிகளுக்கான தொடக்க விழா மே 01 அன்று அக்கல்லூரியில் நடைபெற்றது. சதுரங்க அமைப்பின் செயலர் வி.விஜயராகவன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். டாக்டர் என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் நல்ல. ஜி. பழனிசாமி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் தமது உரையில் சதுரங்கம் என்பது பிற எல்லா விளையாட்டுகளையும் விட மிகவும் விழிப்புநிலையோடு அறிவார்ந்த முறையில் விளையாடுகின்ற ஒன்று என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் செயலர் டாக்டர் தவமணி பழனிசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில் சதுரங்க விளையாட்டானது எதிர் வீரரின் தொலைநோக்கையும் தான் கணித்து சாதுர்யமாக ஆடும் விளையாட்டு என்பதைக் குறிப்பிட்டார். பின்பு அந்நிறுவன முதல்வர் டாக்டர் கே.பொற்குமரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அவர் பேசுகையில் சதுரங்கமானது எதிர் வீரரின் பலம் பலவீனங்களை நன்கு கணித்து தந்திரத்தோடு விளையாடும் விளையாட்டு என்பதை தெரிவித்தார். இறுதியாக சிறப்புரை வழங்கிய கோவை மாவட்ட சதுரங்க அமைப்பின் தலைவர் என்.ஜெயபால் அவர்கள் போட்டியின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை விளக்கினார். மேலும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.30,000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்றும், மாநில அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெறும் முதல் இரு ஆண் மற்றும்  இரு பெண் வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டு தேசிய அளவில் ஜூன் 14 முதல் 22 வரை அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க அனுப்பப்படும் என்று கூறி, போட்டிகளுக்கான தன் வாழ்த்தைக் கூறி நிறைவு செய்தார்.