பெற்றோர்களை நேசிக்கும் மாணவர்களை உருவாக்க வேண்டும் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

2018-19ஆம் கல்வியாண்டு முதல் தமிழக அரசு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையை முழுமையாக இணைய தளத்தின் மூலம் செயல்படுத்த உள்ளது. இதன் அறிமுக விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்.என்.ஆர் அறக்கட்டளை சார்பில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர் சன்ஸ்அறக்கட்டளை நிர்வாகஅறங்காவலர் ஆர்.விஜயகுமார் வரவேற்புரையாற்றினார்.

அவர் கூறுகையில், மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு எடுத்த இந்த முடிவு மிகவும் பாராட்டுக்குரியது. இத்திட்டத்தை எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் சார்பில் வெளியிடுவது மேலும் மகிழ்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது என்றார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்றஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பொறியியல் கல்லூரி மாணவர்களின் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தற்பொழுது இணைய தளம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனை மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது தற்பொழுது தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் கல்வித்தரத்தில் உயர்ந்துள்ளது என்றார்.

கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், மாணவர்களின் நலன் கருதி 44இடங்களில் இப்பணியை மேற்கொள்ள இருக்கிறது.

மேலும், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருவது ஒரு வரப்பிரசாதம் ஆகும். தற்பொழுது 539 பொறியியல் கல்லூரிகள்இயங்கி வருகின்றன. கல்வித்துறையை பொறுத்த வரையில் 43.3% வளர்ச்சியடைந்துள்ளது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் வழங்கிமாணவர்களை பள்ளிக்கு வரச் செய்தார்.இது போன்ற எண்ணற்றதிட்டங்களை செயல்படுத்தி இன்று கல்வித்துறை பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளது.

மேலும், ரூ.60 கோடி செலவில் சுமார் 3000ஸ்மார்ட் வகுப்புகள் ஏழை எளிய மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட உள்ளது. 9,10,11,12 ஆம் வகுப்புமாணவர்களுக்கு இணையதளம் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படும். மாணவர்களை கல்வி சார்ந்து ஊக்குவிப்பதோடு பெற்றோர்களை நேசிக்கும் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றார்.

சட்டசபை துணை சபா நாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்  சிறப்புரையாற்றினார்.

அண்ணா பல்கலைக்கழகம் டிஎன்இஏ செயலாளர்  றைமண்ட் உத்தரியராஜ் ஆன்லைன் கவுன்சிலிங் குறித்து மாணவர்களுக்கு விளக்கவுரையளித்தார்.

கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி மாணவர்களின் சேர்க்கையைபற்றி விளக்கமளித்தார்.

எஸ்.என்.ஆர் அறக்கட்டளை இயக்குனர் எபிநேசர் ஜெயகுமார், தலைமை செயல் அலுவலர் ராமகிருஷ்ணா, தலைமை நிர்வாக அதிகாரி சி.வி.ரவிகுமார், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.