நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கம் ஒன்றில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் நான்கு மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் பேசிய பழனிக்குமார், ஒரு வார காலமாக தேர்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாகவும் தேர்தலுக்காக பல காரியங்கள் செய்ய வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார். 50 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருவதாக தெரிவித்த அவர் அந்த மக்களுக்கான தேவைகள் அதிகரித்து வருவதாக கூறினார்.

மின்னணு எந்திரங்களைக் கொண்டு இந்தத் தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சட்ட விதிகளைத் தெரிந்து கொண்டு தேர்தல் நடத்துவது மிக எளிதாக இருக்கும் என்றும் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்த தேர்தலை நடத்தவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையாளர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.