சாணிக்காயிதம் திரையரங்கில் வெளியாவதில் சிக்கல்?

வன்முறைக்காட்சிகள் ஏராளமாக உள்ளதால் சாணிக்காயிதம் திரையரங்கில் வெளிவருமா இல்லை நேரடியாக ஓடிடியில் வெளியாகுமா என கோடம்பாக்கத்தில் சந்தேகம் கிளப்புகின்றனர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் சாணிக்காயிதம். அதீத வன்முறைக் காட்சிகள் நிறைந்த படம் என்பதால் திரையரங்கில் இந்தப் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரண்யகாண்டம், சூப்பர் டியூலெக்ஸ் போன்ற படங்களின் இயக்குனரான தியாகராஜன் குமாரராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அருண் மாதேஸ்வரன்.

இவரது முதல் படமான ராக்கியில் தரமணி படத்தின் நாயகன் வசந்த் ரவி மற்றும் பாரதிராஜா உள்பட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ராக்கியின் ஹைலைட், அதன் ரத்தம் தெறிக்கும் வன்முறை. இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் வாங்கியது. என்ன காரணம் தெரியவில்லை, இன்னும் படத்தை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். ராக்கிக்குப் பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கிய படம் சாணிக்காயிதம். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் சில வாரங்கள் முன் முடிவடைந்தன. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இந்தப் படத்திலும் வன்முறைக்காட்சிகள் ஏராளம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முக்கியமாக கீர்த்தி சுரேஷை பலபேர் பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சி இருக்கும் காரணங்களால் சாணிக்காயிதம் திரையரங்கில் வெளிவருமா இல்லை நேரடியாக ஓடிடியில் வெளியாகுமா என கோடம்பாக்கத்தில் சந்தேகம் கிளப்புகின்றனர். படம் சென்சாருக்குப் போகும் போது இதற்கான பதில் தெரிந்துவிடும்.