ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் மாணவர் மேம்பாட்டு சிறப்பு மையம் தொடக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், மாணவர் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டு இதன் தொடக்கவிழா, கல்லூரியில் திங்கட்கிழமை நடைபெற்றது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், ஹனிவெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐ.சி.டி. அகாடமி மூலமாக மாணவர் மேம்பாட்டு சிறப்பு மையத்தை (Center Of Exellence) அமைத்துள்ளது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார்.  ஐ.சி.டி. அகாடமியின் திட்டங்கள் செயலாக்கப்பிரிவு தலைவர் விஜயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “சென்டர் ஆஃப் எக்ஸலென்ஸ்” எனப்படும் மாணவர் மேம்பாட்டு சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி உச்சத்தைத் தொட்டிருந்தது. அப்போது தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை அளிக்க முன்வருமாறு, மத்திய அரசு ஐசிடி அகாடமியை கேட்டுக் கொண்டது.

இதன் அடிப்படையில் உயர்கல்வித்துறையில் பணியாற்றும் பேராசிரியர்களின் தொழில்நுட்ப அறிவுத்திறனை மேம்படுத்த, பொதுமக்கள்-தனியார் நல்லுறவுத் திட்டம் வகுக்கப்பட்டது.

எந்த ஒரு தொழில்நுட்பம் என்றாலும் அதை முதலில் உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கொண்டுச் செல்லும் பணியை ஐ.சி.டி. அகாடமி செய்து வருகிறது. பல நிறுவனங்கள், நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தில் இதற்காக நிதியுதவி அளிக்கின்றன. இதன்மூலம் பேராசிரியர்களின் அறிவுத்திறனை வளர்த்தல், மாணவர்களின் திறனை வளர்த்தல் மற்றும் பயிற்சி அளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி ஹனிவெல் நிறுவனம் அளித்துள்ள ரூ.1 லட்சம் நிதியுதவியில்தான், இந்த கல்லூரியில் உள்ள சிறப்பு மையம் அமைக்கப்பட்டு அதன்மூலம் 120 மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தற்போது அளிக்கப்படக்கூடிய சான்றிதழ் பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்கு உலக அளவில் வாய்ப்புகளை உருவாக்கித் தரவல்ல மைக்ரோசாப்ஃட் நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள் தங்களுடைய திறனை வளர்த்துக் கொள்ள 100 சதவீதம் ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றால், சிறந்த நிறுவனங்களின் ஊழியர்களாகப் பணியாற்றி முடியும் பேசினார்.

விழாவில் ஐ.சி.டி. அகாடமி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.