பவளப் பாறை எனும் ஆக்சிஜன் தொழிற்சாலை

உலகில் நாம் உயிர் வாழ உதவும் ஆக்சிஜனில் பாதிக்கும் மேல் கடலில் தான் உருவாகிறது. அதுவும் அந்த ஆக்சிஜனை பவளப் பாறைகள் தான் உற்பத்தி செய்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? நம்பித் தான் ஆக வேண்டும். ஏனென்றால் அது தான் உண்மை.

பவளப் பாறை என்றால் என்ன? கன்னியாகுமரி போன்ற கடற்கரையோர சுற்றுலா தளங்களில் அலங்காரமாக வைக்க முள்ளு முள்ளாக, மான்கொம்பு போல கடல்பஞ்சு என்று விற்பார்களே அது ஒரு வகை பவளப் பாறை. அவற்றில் பல வகைகள் உண்டு. கடலுக்குள் பல வண்ணங்களில் அழகழகாக வளரும் ஒரு தாவர வகையான இந்த பவளப் பாறைகளால் பல பயன்கள் உண்டு. கடல் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாப்பதில் இந்த பவளப் பாறைகளுக்கு பெரும்பங்கு உண்டு. முதலில் இது பல நூறு வகை கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழிடம் வழங்குகின்ற ஒரு வள்ளல். அதைப்போலவே கடல்வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்னொருபுறம் கடற்கரையோரப் பகுதிகள் தீவிரமாக மோதும் அலைகளால், வீசும் பெருங்காற்றால் சேதமாகாமல் கடற்கரையோரப் பகுதிகளை காப்பாற்றும் ஷாக் அப்சார்பராகவும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆக்சிஜன் உருவாக்கும் தொழிற்சாலையாகவும் இருப்பது தான் மிக முக்கியமானது.

அது என்ன ஆக்சிஜன் தொழிற்சாலை? இந்த பவளப் பாறைகளுக்கும் இதன் உட்புறத்தில் வாழும் ஒரு வகை கடல்பாசிக்கும் ஒரு எழுதாத ஒப்பந்தம் உண்டு. அதாவது அந்தப் பாசி இந்த பவளப் பாறைகளில் இருந்து வேண்டிய சத்துகளை எடுத்து உயிர்வாழும், அந்த பாசி ஒளிச்சேர்க்கை செய்வதற்கு தேவையான கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொள்ளும். பதிலாக ஆக்சிஜனை வெளியிடும்.

எவ்வளவு ஆக்சிஜனை இந்த பவளப் பாறைகள் தருகின்றன என்று தெரிந்தால் உண்மையிலேயே அதிர்ந்துபோய் விடுவோம். ஆம், உலகிலேயே அதிக ஆக்சிஜனை அதிகமாக தருபவை காடுகள் தான். அந்த காடுகளை விட அதிகமாக உலகில் கிடைக்கும் மொத்த ஆக்சிஜன் அளவில் பாதிக்குமேல் இந்த பவளப் பாறைகள் மூலமாகத் தான் கிடைக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறகிறார்கள்.

இந்த பவளப் பாறைகளுக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த பவளப் பாறைகள் பாதிக்கப்படுவதற்கும் காலநிலை மாற்றத்துக்கும் தொடர்புண்டு. பவளப் பாறைகள் பாதிக்கப்படுவதற்கும் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனுக்கும் தொடர்பு உண்டு. அந்த வகையில் எங்கோ கடலில் இருக்கும் பவளப் பாறைகள் அழிந்தால் என்ன என்று நாம் சும்மா இருந்து விட முடியாது, இருந்து விடக்கூடாது என்று விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.

பவளப் பாறைகள் என்பவை கிட்டத்தட்ட 800 வகையான தாவரங்கள், 4000 க்கும் மேற்பட்ட மீன் வகைகளை பராமரிக்கும் ஒரு கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பு. ஒருபுறம் பெரும் பொருளாதார மதிப்பும், இந்த புதிய நூற்றாண்டில் பல்வேறு புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆதார வளங்களில் ஒன்றாகவும், கடல் அரிப்பைத் தடுக்கும் தடுப்பாகவும், இவை விளங்குகின்றன. எல்லாவற்றக்கும் மேலாக உலகில் உயிரினங்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகவும் இருக்கின்றன. எனவே இந்த உலகின் இயற்கையையும் அதில் வாழும் உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டுமானால் அதற்கு செய்ய வேண்டிய முக்கிய பணிகளில் பவளப் பாறைககளை பாதுகாப்பதும் ஒன்று ஆகும்.