பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் – ஈஸ்வரன்

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிலைப்பாடு என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 44 வாட்டர் டாக்டர் இயந்திரங்களை அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், திருசெங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் மருத்துவமனை முதல்வர் நிர்மலாவிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் வெந்நீருக்காக வெளியே செல்ல வேண்டிய சூழல் உள்ளதால், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட தலைமை சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு வாட்டர் டாக்டர் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தமிழக அரசு கொங்கு மண்டலம் குறிப்பாக கோவை மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி வருகிறது எனவும், அதன் காரணமாகவே முதலமைச்சர் பலமுறை கோவை மாவட்டத்திற்கு வந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார். திமுக தலைமையிலான கூட்டணியுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு செல்வாக்கு உள்ளதால் அங்கு போட்டியிட கேட்டுள்ளதாகவும் கூறிய அவர், இன்று அல்லது நாளை போட்டியிடும் இடங்கள் தெரிந்துவிடும் என தெரிவித்தார்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிலைப்பாடு என பதில் அளித்தார்.